எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 17


தேசிக தர்சநம் காட்டிய

ஸ்ரீமதித்யாதி ……

ஸௌமிய நாராயணாசாரியார் ஸ்வாமி

(திருக்கோட்டியூர் ஸ்வாமி)

திருக்கோட்டியூர் ஸ்வாமி என்றும் கோஷ்டீபுரம் ஸ்வாமி என்றும் பிரஸித்தராக எழுந்தருளியிருந்த ஆசார்ய சிரேஷ்டரான ஸ்ரீ ஸௌம்ய நாராயணாசார்ய ஸ்வாமியை நம் நாட்டில் அறியாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அவருடைய ஞானம் அநுஷ்டானம் ப்ரவசநம் எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்ம குணங்கள் இவற்றைக் கண்டு எல்லோருக்கும் அவரிடம் பக்தியும், ப்ரீதியும் இருந்தது. அவரை ‘ஸௌம்ய மூர்த்தி’ என்றும் சொல்வார்கள்.

“என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே” என்று அருளிச் செய்த திருப்பாணாழ்வாருடைய திருநக்ஷத்ரமான கார்த்திகை மாதத்து ரோஹிணியில் ஸ்வாமி திருக்கோட்டியூரில் அவதரித்தார். பால்யத்திலேயே தர்க்கம், வியாகரணம், முதலான சாமான்ய சாஸ்த்ரங்களை தகுந்த வித்வான்களிடம் வாசித்து, பிதாவிடம் இதிஹாஸ புராணங்களைக் கேட்டுணர்ந்து, பிதா மஹரான ஸ்ரீஸுந்தரார்ய தேசிகனிடம் அத்யாத்ம க்ரந்தங்களை அப்யஸித்தார். பதினாறு வயதிலேயே ஸ்வாமியின் மேதையைக் கண்டு, ஆசார்யரான பிதாமஹர் ‘இவர் தேசிகதர்சநமுகந்த ஆசிரியர், இவரால் ஜகத்துக்கு மிகுந்த உபகாரம் ஏற்படும்’ என்று நிச்சயித்து தாமும் கூட இருந்து தம் சிஷ்யர்களுக்குக் காலக்ஷேபம் ஸாதிக்கும்படி செய்து, பிரவசநத்தில் பூர்ண யோக்யதை உண்டாகும்படி அநுக்ரஹித்தார். அன்று முதல் ஸ்வாமி திருநாட்டுக்கு எழுந்தருளும் வரையில் அநந்ய தினங்கள் தவிர மற்ற நாட்களில் காலக்ஷேபம் ஸாதிக்காமலிருந்த நாளே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பிரதி தினமும் காலை வேளைகளில் ஸ்ரீபாஷ்யம், கீதா பாஷ்யம், பகவத் விஷயம் – திருவாறாயிரப்படி, ஸ்ரீமத்ரஹஸ்ய த்ரயஸாரம் ஆகிய கிரந்த சதுஷ்டயங்களில் ஏதாவதொன்றில் ப்ரவசநமும், பிற்பகலில் ஒரு புராணத்தின் பாராயணமும், ஸாயங்காலங்களில் சுருத பிரகாசிகை, ஈடு—36000 படி, சில்லரை ரஹஸ்யங்கள் முதலான கிரந்தங்களில் ஒன்றின் காலக்ஷேபமும், பிறகு ஸ்ரீரங்கநாதன் முதலான எம்பெருமான்களின் மங்களாசாஸனமும், ராத்திரி ஸ்ரீமத் ராமாயணம், பாகவதம் முதலியவற்றின் பிரவசநமும் நடந்து கொண்டே இருக்கும். இவ்வாறு தம் நித்ய நைமித்திக கர்மங்களின் அநுஷ்டான காலம் போக மற்ற காலம் எல்லாவற்றையும் பிரவசநத்திலேயே கழித்து வந்தார். ஸ்ரீதேசிகனுடைய ஸ்தோத்ரங்களிலும் ஸ்வாமிக்கு ஸ்ரீபாஷ்யத்தில் இருந்தது போலவே கௌரவமும் ஆதரவும் இருந்தது. வேதாந்தம் என்கிற ஸம்ஸ்க்ருத உபநிஷத், திவ்யப்ரபந்தம் என்கிற த்ரமிடோபநிஷத், உபய வேதாந்தமும் நம் ஸம்பிரதாயத்துக்கு இரண்டு கண்கள் போன்றவை. அவைகளுக்குள் ஏற்றத்தாழ்வைக் கல்பிப்பது பிரமாண விருத்தம் என்று அடிக்கடி ஸாதிப்பது வழக்கம். உபய வேதாந்தங்களிலும் பரிபூர்ண ஜ்ஞானம் இருந்ததற்குமேல் ஸ்ரீதேசிகனுடைய ரஹஸ்யகிரந்தங்களில் திருக்கோட்டியூர் ஸ்வாமிக்கு அஸாதாரணமான ஆழ்ந்த பரிசயம் இருந்தது. தம் நித்ய வாழ்க்கையிலோ அல்லது உபந்யாஸங்களிலோ அல்லது காலக்ஷேபங்களிலோ பிறர் மனம் புண்படும்படி வார்த்தையே வராது. வாக்யார்த்த ஸமயங்களில்கூட பிரதி பக்ஷிகளும் ஸந்தோஷப்படும்படியே பேசுவது வழக்கம். சாஸ்த்ர விருத்தமான அம்சமாயிருந்தால் பிறருடைய அப்ரீதிக்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்காது சாஸ்த்ரீயமான வழியை எடுத்துக் காட்டத் தயங்கமாட்டார். அதுபோலவே, சாஸ்த்ர மூலமல்லாத ஸங்கேதங்கள் ஸம்ப்ரதாயத்தில் புகுந்திருந்தால், அவற்றை விலக்கி சாஸ்த்ரம் சொன்ன முறையில் தாம் அநுஷ்டிக்க பயப்பட மாட்டார்.

இவ்வளவு ஜ்ஞானமும் அனுஷ்டானமும் ஆசாரமும் இருந்தாலும் குழந்தை போல் ஸௌலப்யமும் கல்மஷமற்ற ஸ்வபாவமுமுடையவர் கோஷ்டீபுரம் ஸ்வாமி. பெரியவர் சிறியவர் எல்லோருடனும் கௌரவத்தோடும் அன்புடனும் பழகுவர். “ஸ்ரீபாஷ்யத்தை வாசித்துப் பிரவர்த்திப்பித்தல்” என்று தேசிகன் அருளிச் செய்தபடி ஸ்ரீபாஷ்யாதி வேதாந்த கிரந்தங்களைப் பிரவசநம் செய்வதில் எவ்வளவு ருசியும் சிரத்தையும் இருக்குமோ அதேபோலப் ப்ரீதியுடன் ரகுவம்சம் வாசிக்க வந்த சிறுவனுக்கும் பாடம் சொல்லிக் கொடுப்பார். இந்தப் பிரவசநத்தால் பரக்கும் புகழ் வரும் பைம்பொருள் வாய்த்திடும் அறமுளது என்று இயம்பாது அது பகவத் கைங்கர்யம் என்று ஸ்வயம்ப்ரயோஜனமாகவே செய்து வந்தார் என்பது அடியோங்கள் நேரில் அனுபவித்த விஷயம்.

திருக்கோட்டியூர் ஸ்வாமிக்கு சுருதி ஸ்ம்ருதி, இதிஹாஸ புராணங்கள், ஆழ்வார்களுடைய அருளிச் செயல்கள், பூர்வாசார்யர்களுடைய ஸ்ரீஸூக்திகள் எல்லாவற்றிலும் பூர்ணமான ஜ்ஞானமும், ஆழ்ந்த அனுபவமும் இருந்தபடியால், உபந்யாஸங்களில் பகவத் குணங்களைச் சொல்ல ஆரம்பித்தால் சுலோகங்களும் பாசுரங்களும் நான் முன்னே நான் முன்னே என்று முந்திக்கொண்டு வந்து இடம் பெற்று கேட்பவர்களையும் ஆநந்தானுபவத்தில் அமிழச் செய்யும்.

ஸ்வாமி ஸ்ரீதேசிகனுடைய ரஹஸ்ய க்ரந்தங்களில் கோஷ்டீபுரம் ஸ்வாமிக்கு இருந்த ஞானம் நிகரற்றது. அவற்றில் சொல்லியபடியே தம் வாழ்க்கையை வகுத்து நடத்தி வந்தார். இப்பவும்கூட ரஹஸ்யத்ரய ஸாரத்தை ஸேவித்தால், — முக்கியமாக ஸ்வநிஷ்டாபிஜ்ஞாநாதிகாரம் முதலிய சில அதிகாரங்களை ஸேவித்தால் – அங்கே சொல்லியிருக்கும் குணங்களெல்லாம் ஸ்வாமியிடம் நிகழ்ந்தன என்பதை உணரும்போது கோஷ்டீபுரம் ஸ்வாமி அந்தக் கிரந்தத்தைப் பின்பற்றி நடந்தாரா அல்லது அவர் அநுஷ்டாநத்தை முன்கூட்டியே அறிந்து ஸ்ரீதேசிகன் தம் கிரந்தத்தில் அருளிச் செய்தாரா என்று நினைக்கும்படி யிருக்கும். ஸ்வாமி ஒரு ஆதர்ச மஹாபுருஷர், பாகவதோத்தமர் என்று தேசிக தர்சனம், திருக்கோட்டியூர் ஸ்வாமியை நமக்குக் காட்டிக் கொடுக்கிறது. அதுபோலவே நம் அனுபவத்திலும் அனுஷ்டாநத்திலும் கொண்டு வந்து நாம் உஜ்ஜீவிப்பதற்கு உயர்ந்த ஸாதனம் தேசிக தர்சநம் என்று கோஷ்டீபுரம் ஸ்வாமி தம் உபதேசத்தாலும் அநுஷ்டாநத்தாலும் தேசிக தர்சனத்தை நமக்குக் காட்டிக் கொடுத்திருக்கிறார். இது அவர் நமக்கும் தர்சனத்துக்கும் செய்த பேருபகாரம்.

இனி ஸ்ரீ தேசிகனுடைய ரஹஸ்ய க்ரந்தங்களை ஸேவிக்கும்போது அவை ஸௌம்ய மூர்த்தியான திருக்கோட்டியூர் ஸ்வாமியை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றன என்பதற்கு உதாரணமாக இரண்டொரு ஸ்ரீஸூக்திகளைக் கொடுப்பதுடன் இதை முடித்துக் கொள்கிறேன்.

“பாகவதரில் ஸம்யக்ஜ்ஞாநாதிகர் ஸத்கார யோக்யரில் ப்ரதாநர் (59)

நிர்வேதாதிகர் ஸல்லாப யோக்யரில் ப்ரதாநர்.(60)

வைராக்யாதிகர் ஸஹவாஸ யோக்யரில் ப்ரதாநர் (61)

அபராத பீரூக்களாய் அவதாரங்கள் போலவே ஸ்வமாஹாத்ம்யத்தை மறைத்து வர்த்திக்கு மவர்கள் பீதியோக்யரில் ப்ரதாநர் (63)”

—- ப்ரதாந சதகம் (59 – 63)

ஸந்தோஷார்த்தம் …………. ப்ரபந்ந:

(ப்ரபத்தியை அனுஷ்டித்தவன் சரீர வாழ்க்கை மோக்ஷ வாழ்க்கை இரண்டிலும் தனக்கு பாரம் நீங்கிவிட்டது என்பதை உணர்ந்தவனாய், இச்சரீரம் அழியும்வரையில் குற்றமற்ற இனிய வாழ்க்கையைக் கைக்கொண்டு, தன் மகிழ்ச்சிக்காக வேதாந்த க்ரந்தங்களைப் பெரியோர்களுடன் அடிக்கடி ஆராய்கிறான்; செவிக்கினிய செஞ்சொற்களான ஆழ்வார்களின் அருளிச் செயல்களை எப்போதும் கேட்பவர்கள் கிடைத்தால் சொல்லுகிறான், சொல்கிறவர்கள் கிடைத்தால் தான் கேட்கிறான்.)

ஆஸ்திக்யவான் …………. சார்வதீம் ந:

(ஆஸ்திக்யமுள்ளவனாகவும், கூர்மையான புத்தியுள்ளவனாயும், அஸூயை யற்றவனாயும், நல்ல ஸம்ப்ரதாயத்தால் தூய மனமுடையனாயும், நல்லதையே விரும்புகிறவனாயும், மூடக் கட்டுப்பாட்டுக்கு அஞ்சாதவனாயும், அற்ப பலன்களில் பற்றற்றவனாயுமுள்ள ஒருவன் நம்முடைய நித்யமான நல்வழியைப் பின்பற்றப் போகிறான்)

ஏ. ஸ்ரீநிவாஸராகவாச்சாரியார் ஸ்வாமி, M.A.

(இது அடியேனின் குறிப்பு. எங்கள் மாவட்டத்துக்காரர் என்ற மகிழ்ச்சியில் கோஷ்டீபுரம் ஸ்வாமியின் படத்தை இங்கு சேர்த்திருக்கிறேன்.)

 

பின்னூட்டமொன்றை இடுக