ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 25

(57) குஹன் லக்ஷ்மணனைப் பார்த்து, ”நீ ராஜபுத்ரன், ஸுகமாயிருக்கத்தகுந்தவன், இந்தப் படுக்கையில் படுத்துக் கொண்டு தூங்கு. நான் எல்லா க்லேசங்களையும் அநுபவிக்கிறவன். நான் வில்லுங்கையுமாய் என்னைச் சேர்ந்தவர்களுடன்கூட இருந்து ராமனையும் ஸீதையையும் ரக்ஷிக்கிறேன். உலகத்தில் ராமனைக்காட்டிலும் எனக்கு அதிக ப்ரியமானவன் ஒருவனும் இல்லை. நான் சொல்லுவது உண்மை. ஸத்யத்தின்மேல் ஆணை யிடுகிறேன் என்று சொன்னான். லக்ஷ்மணன், "நீ ரக்ஷிப்பது உண்மையே. இதில் எனக்குப் பயமில்லை. ஆனால், **ராமன் ஸீதையுடன் பூமியில் படுத்துத் தூங்குகையில் எனக்கு எப்படித் தூக்கம் வரும்?

[**ராமனைத் தசரதன் தபஸுபண்ணிப் பெற்றான்; அவன் தரையிலே படுக்கலாமோ? ராமன் வஸிஷ்டருடைய சிஷ்யனானபடியாலே கீழே உட்காருவதில் பழகினவன்; ஆகையால் அவன் தரையிலே படுக்கலாம். மிகவும் ஸுகமாக வளர்ந்த ஸீதை இப்படித் தரையில் படுக்கத் தகுந்தவளோ? இந்தக் கஷ்டங்களைப் பார்த்து எனக்குத் தூக்கம் வருமோ? வந்த தூக்கத்தைப்போக்க நான் ப்ரயத்னம் பண்ணவில்லை. தூக்கமே வரவில்லை என்பது லக்ஷ்மணன் கருத்து.]

எனக்குப் பிழைத்திருப்பதிலோ, ஸுகத்திலோ ஆசையில்லை. எவனைத் தேவர்களும் அஸுரர்களும் சண்டையில் எதிர்த்து நிற்க அவன் ஸீதையுடன் புல்லில் படுத்திருக்கிறானே. இவன் காட்டுக்கு வந்தபிறகு ராஜா உயிருடன் இருக்கமாட்டார். அவரால் ரக்ஷிக்கப்பட்ட பூமி விதவையாகும். கௌஸல்யையும் ராஜாவும் என் தாயாரும் $$பிழைத்திருக்கக்கூடுமானால், இன்று ஓர் இராத்திரிதான் பிழைத்திருப்பார்கள்.

{$$இதற்கு வேறுவிதமாயும் அர்த்தம் பண்ணலாம் – "கௌஸல்யையும் அரசனும் எனது தாயாரும் இன்று ஒரு ராத்திரியாவது ஜீவித்திருப்பார்களா 2 ஆனால், நான் அப்படி எண்ணவில்லை" என்பது. இது ஸ்வாஸமான அர்த்தம். மேலே எழுதினது வியாக்யானத்தை அநுஸரித்தது.}

என் தாயார் சத்ருக்னனைப் பார்ப்பதற்காக ஒருகால் ஜீவித்திருக்கலாம். கௌஸல்யைக்கு ஒரே பிள்ளை. அவள் ராமனைப் பாராமல் இறந்தேபோய்விடுவள்" என்று சொன்னான். இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் இராத்திரி போய்விட்டது. (ஸ-51) பொழுதுவிடிந்தவுடன் ராமன் கட்டளைப்படி குஹனுடைய வேலைக்காரர்களால் ஓடம் கொண்டுவரப்பட்டது. ராமனும் ஸீதையும் லக்ஷ்மணனும் ஓடம் ஏற, கங்கையைக் குறித்துச் சென்றார்கள். ஸுமந்த்ரனும் கூடச் சென்றான். அப்பொழுது ராமன் ஸுமந்த்ரனைப்பார்த்து "ஸுமந்த்ரா! நீ திரும்பி ராஜாவினிடம் போ. ரதம் வேண்டாம். நாங்கள் காட்டுக்குள் கால்நடையாகப் போகிறோம்” என்று சொன்னான். ஸுமந்த்ரன் -" நீ ஒருவராலும் செய்ய முடியாத வேலையைச் செய்கிறாய். நீ மிகுந்த கீர்த்தியை அடையப் போகிறாய். நாங்களோ பாபிகள். கைகேயி வசமிருக்கப் போகிறோம்" என்று சொல்லிக்கொண்டே கூடச்சென்றான். அப்பொழுது ராமன் வெகுதூரம் வந்துவிட்டதையறிந்து, ஸுமந்திரன் அழுதான். அவனைப்பார்த்து ராமன் "என்னைப்பற்றி ராஜா எப்படித் துக்கப்படாரோ, அப்படிச்செய். கைகேயிக்குப் பிரியத்தைச் செய்ய அவர் எதைச் சொல்லுகிறாரோ, அதைச் செய்யவேண்டியது. அயோத்யைவிட்டுக் காட்டில் வஸிக்கிறோம் என்று நானாவது ஸீதையாவது லக்ஷ்மணனாவது துக்கப்படவில்லை. பதினான்கு வர்ஷம் முடிந்தவுடன் திரும்பி வரும் எங்களை நீர் பார்ப்பீர்’ என்று நான் சொன்னதாக அவரிடம் சொல்லு. என் தாயாரிடமும் மற்றத் தாயார்களிடமும் கைகேயியிடமும் ஸௌக்யமாயிருப்பதாகவும், அவர்கள் திருவடிகளில் நமஸ்காரம் பண்ணினதாகவும் சொல்லு. பரதனைச் சீக்கிரம் வருவித்து அவனை ராஜ்யத்தில் ஸ்தாபிக்கும்படி ராஜாவிடம்சொல்லு. ராஜாவினிடத்தில் நீ எப்படியிருப்பாயோ, அப்படியே எல்லாத் தாயார்களிடத்திலும் பேதம் பண்ணாமலிரு’ என்று பரதனிடத்தில் சொல்’ என்று சொன்னான். இதைக் கேட்டு ஸுமந்த்ரன் "நான் வெறும் உபசாரத்துக்காகச் சொல்லவில்லை. அன்புடன் சொல்லுகிறேன். உன்னிடத்தில் எனக்குப் பக்தி உண்டு. நான் சொல்லுவதைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். உன்னை விட்டு எப்படி நான் நகரத்துக்குத் திரும்பிப்போவேன். உன்னை விட்டுவிட்டுத் திரும்பிவந்த ரதத்தைப் பார்த்து, அந்த ஊர் ஜனங்களின் மனது வெடிக்குமே. உன்னைவிட்டுப் பிரிந்த ஜனங்களின் வருத்தம் உனக்குத் தெரியுமே. ஆகையால் உன்னை விட்டுப்போக என்னால் முடியாது. வனத்தில் உன்னுடன்கூட இருக்கும்படி உத்தரவு கொடு. நான் சொன்னதைச் செய்யாமல் என்னை விட்டுவிட்டால், நான் அக்னிப்ரவேசம் செய்வேன்" என்று வேண்டினான். ராமன் "உனக்கு என்னிடம் இருக்கும் பக்தியை அறிவேன். எதற்காக உன்னைத் திருப்பி அனுப்புகிறேன், தெரியுமா? உன்னைப்பார்த்து கைகேயிக்கு நான் காட்டுக்குப் போய்விட்டேன் என்ற நம்பிக்கை உண்டாகும். அவள் ஸந்தோஷப்பட்டு ‘ராஜா பொய் சொன்னான் என்று நினைத்து அவரிடம் அவநம்பிக்கைக் கொள்ளமாட்டாள். நான் சொன்ன ஸமாசாரங் களை அவரவர்களுக்குச் சொல்லு" என்று அவனை ஸமாதானப்படுத்தி, தலைமயிரை ஜடையாகப் பண்ணிக் கொள்ள, ஆலமரத்தின் பாலைக் கொண்டு வரும்படி குஹனிடம் சொன்னான். அதைக் குஹன் கொண்டுவந்து கொடுத்தான். அந்தப் பாலால் ராமன் தன் தலைமயிரையும்,லக்ஷ்மணன் தலை மயிரையும் ஜடையாகப் பண்ணினான் ஸுமந்த்ரனுக்கும் குஹனுக்கும் விடைகொடுத்து, ஓடத்தில் ராமனும் மற்றவர்களும் ஏறினார்கள். கங்கையின் நடுவில் போகையில், ஸீதை அஞ்ஜலி பண்ணிக்கொண்டு, கங்கையைப் பார்த்து, "கங்கே! இவன் தசரத ராஜன்பிள்ளை. உன்னால் ரக்ஷிக்கப்பட்டுப் பிதாவின் பிரதிஜ்ஞையை நிறைவேற்றி, பதினான்கு வர்ஷம் காட்டிலிருந்து என்னுடனும் தம்பியுடனும் திரும்பி வருவன். அப்போது ப்ராம்மணர்களுக்கு லக்ஷம் கோக்களைத் தானம் பண்ணுகிறேன்; உனக்கும் உன் கரையிலிருக்கும் தேவதைகளுக்கும் தீர்த்தங்களுக்கும் தேவாலயங்களுக்கும் பூஜை செய்கிறேன் என்று பிரார்த்தித்தாள். பிறகு கங்கையின் தென்கரையைச் சேர்ந்து, ஓடத்தை அனுப்பிவிட்டு, கால்நடையாய் முன்னால் லக்ஷ்மணனும், நடுவில் ஸீதையும், கடைசியில் ராமனுமாகப் போனார்கள். (ஸ-52.)

ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 24

(55) அப்போது ஸூரியன் அஸ்தமித்தான். ராமன், "இங்கே தீர்த்தபானம் பண்ணிப் படுத்திருப்போம்" என்று சொல்ல, லக்ஷ்மணனும் ஸுமந்த்ரனும் மரங்களிலிருந்து விழுந்த பழுப்பிலைகளைப் பரப்பி, ராமனுக்கும் ஸீதைக்கும் படுக்கையை ஏற்பாடு செய்தார்கள். அதில் ராமனும் ஸீதையும் தூங்கினார்கள். ஜனங்களும் மரத்தடிகளில் தூங்கினார்கள். லக்ஷ்மணனும் ஸுமந்த்ரனும் ராமனுடைய குணங்களைச் சொல்லிக்கொண்டு தூங்காமலிருந்தார்கள். கொஞ்ச காலம் சென்றபிறகு எல்லாரும் ரதத்தில் ஏறிக்கொண்டு தமஸாநதியைத் தாண்டிக் கூடவந்த ஜனங்களை வஞ்சிப்பதற்காக கொஞ்சதூரம் வடக்குமுகமாய்ப் போய்ப் பிறகு திரும்பி வனம் போய்ச்சேர்ந்தார்கள். (– 46) ஜனங்கள் விடியற்காலத்தில் எழுந்திருந்து, ராமனைக் காணாமல், மிகுந்த துக்கத்துடன் தங்களை நிந்தித்துக்கொண்டார்கள் – "இந்தத் துக்கத்தைச் சுடவேண்டும். பக்தியுள்ள நம்மைவிட்டு விட்டு ராமன் போய்விட்டானே. அவன், தகப்பன் பிள்ளைகளை ரக்ஷிப்பதுபோல் நம்மை ரக்ஷிப்பவன் அன்றோ. அவன் நம்மை விட்டு ஜனங்களில்லாத காட்டுக்கு எப்படிப்போனானோ? இங்கேயே நாம் மரணத்தை அடைவோம். மரணம் அடையும் நிச்சயத்துடன் வடக்கே போய்க்கொண்டிருப்போம். இவ்விடத்தில் உலர்ந்த விறகு ஏராளமாய் இருக்கிறது. அதினால் அக்னியை வளர்த்து அதில் ப்ரவேசிப்போம். ராமனில்லாமல் அயோத்திக்குத் திரும்பிப்போன நம்மைப் பார்த்து, அந்த நகரத்தில் ஸ்திரீ களுக்கும் குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் ஆனந்தம் அழியுமே. அந்த நகரத்தை எப்படிப் பார்ப்போம்.” இப்படிப் புலம்பிக்கொண்டு ரதம் போன வழி போனார்கள். அப்போது அஃது இன்னவழியாய்ப் போயிற்று என்று தெரிய வில்லை."நாம் என்ன செய்கிறது? தெய்வமே நமக்கு விரோத மாயிருக்கிறதே!" என்று சொல்லிக்கொண்டு நகரத்துக்குத் திரும்பிப் போய்ச்சேர்ந்தார்கள். (-47) திரும்பி வந்தவர்களைப்பார்த்து நகரத்திலுள்ளவர்கள் மிகுந்த துக்கத்தை அடைந்தார்கள். ஜனங்கள் வேண்டியவர்களையோ அபூர்வ வஸ்துக்களையோ கண்டு ஸந்தோஷப்படவில்லை, வியாபாரிகள் ஸாமான்களைக் கடையில் பரப்பிவைக்கவில்லை. வீடுகளில் சமையல் நடக்கவில்லை. நஷ்டமாகித் திரும்பிக் கிடைத்த பெரிய தனத்தைப் பார்த்தும் ஸந்தோஷப்படவில்லை. தாய்மார் முதன்முதலாகப் பிள்ளையைப் பெற்றும் ஸந்தோஷப்பட வில்லை. ஒவ்வொரு வீட்டிலும் ஸ்திரீகள் திரும்பிவந்த புருஷர்களைப் பார்த்து "ராமனைப் பாராதவர்களுக்கு வீடுகளும் ஸ்திரீகளும் தனங்களும் பிள்ளைகளும் ஸுகங்களும் எதற்காக?” என்று கடுமையாகப் பேசினார்கள். ராமன் எந்த நதிகளிலோ, குளங்களிலோ ஸ்நானம் பண்ணுவனோ, அவைகள் புண்ணிய தீர்த்தங்கள். வனமும் அதிலுள்ளவைகளும் ராமனுக்கு எல்லாவித உபசாரங்களையும் செய்யும் ’ என்று புலம்பி, கைகேயியையும் நிந்தித்துக் கொண்டிருந்தார்கள். (-48)

(56) பொழுதுவிடிவதற்குமுன்னாலே ராமன் வெகுதூரம் போய், கோஸலதேசத்தைக் கடந்து, வேதச்ருதி என்கிற நதியையும் தாண்டி, தெற்குத்திக்கில் போய், கோமதி நதியையும் ஸ்யந்திகை என்கிற நதியையும் தாண்டி, "திரும்பிவந்து ஸரயூ நதிக்கரையில் வேட்டையாடுவேனா?" என்று சொல்லிக்கொண்டேபோனான். (-49) அயோத்யை இருக்கும் திக்கைப் பார்த்து, அஞ்ஜலி செய்துகொண்டு, "காகுத்ஸ்தர்களால் பரிபாலனம் பண்ணப்பட்ட உயர்ந்த நகரமே! உன்னையும், எந்தத் தேவதைகள் உன்னிடத்தில் இருந்து உன்னை ரக்ஷிக்கிறார்களோ அவர்களையும்,விடை கேட்கிறேன். *பிதாவின் கட்டளையை நிறைவேற்றிவிட்டுக் காட்டிலிருந்து திரும்பிவந்து தகப்பனாருடனும் தாயாருடனும் சேர்ந்து உன்னைப்பார்ப்பேன்" சொல்லி, (*அந்ருணோ ஜகதீபதேஎன்பது மூலம். பிதாவின் கடனைத்தீர்ப்பது பிதாவுக்கு தர்ப்பணம் ச்ராத்தம் முதலானவைகளைச் செய்வதுதான். இதுவும் அவசரமாக ராமன் வாயில்நின்றும் வந்துவிட்டது. ) அங்கிருந்த ஜனங்களை "நீங்கள் என்னிடத்தில் தகுந்தபடி ப்ரீதியையும் இரக்கத்தையும் காண்பிக்கிறீர்கள். என்னுடன் கூட இருந்தால் உங்களுக்குத் துக்கம் அதிகமாக ஆகும். ஆகையால், திரும்புங்கள்" என்று சொல்லி அவர்களை அனுப்பிக் கங்கைக்கரைக்குப் போய்ச்சேர்ந்தான். அங்கேயே இராத்திரி இருப்பதாகச் சொல்லி, ஸீதையுடனும் லக்ஷ்மணனுடனும் ரதத்திலிருந்து இறங்கி, ஒரு புங்கமரத்தின் அடியில் இருந்தான். அப்போது சிருங்கிபேரம் என்கிற இடத்திலிருந்த வேடத் தலைவனான குஹன் என்பவன் வ்ருத்தர்களுடன்கூட ராமனிடம் வந்து அவனைத் தழுவிக்கொண்டு ராமா! அயோத்யை எப்படியோ, அப்படியே இந்த இடமும் உனக்கு அதீனம். நான் உனக்கு என்ன செய்வேன்?" என்று சொல்லி, அர்க்யத்தையும் குணமுள்ள பலவித போஜ்யங்களையும் கொண்டுவந்து ஸமர்ப்பித்து, "இந்தப் பூமி முழுவதும் உன்னது. நாங்கள் உனக்கு வேலைக்காரர்கள். நீ எங்களுக்கு ராஜா. எங்களைப் பரிபாலனம் பண்ணு" என்று வேண்டினான். ராமன் "நீ கால்நடையாக வந்ததும், எங்களிடம் ஸ்நேஹத்தைக் காண்பித்ததும் எங்களைப் பூஜித்ததாயிற்று. ஸந்தோஷம் அடைந்தோம்.” என்று சொல்லி, அவனைக் கட்டிக்கொண்டு "நீ ரோகமில்லாமல் பந்துக்களுடனிருப்பதைக் காண மிகவும் ஸந்தோஷம் அடைந்தேன். உன்னுடைய ராஜ்யமும் மித்ரர்களும் தனங்களும் க்ஷேமமாய் இருக்கின்றனவா? நீ ப்ரீதியாய் எவைகளைக் கொண்டு வந்தாயோ, அவைகளைப் பார்த்தேன். ஆனால், அவைகளை நான் பெற்றுக் கொள்ளுவது தகுந்தது அன்று. நான் தர்ப்பைப்புல்லையும் மர வுரியையும் மான்தோலையும் தரித்து, காய்களையும் கிழங்குகளையும் சாப்பிட்டுக் கொண்டு, தபஸ்வியாய் வனத்தில் வாஸம் செய்யப் போகிறேன். இதை நீ தெரிந்துகொள். குதிரைகளுக்குத் தீனியை மாத்திரம் கொடு. வேறொன்றும் எனக்கு வேண்டாம். இதுவே எனக்கு நீ பூஜை செய்வதாக ஆகும்" என்று சொன்னான் இதைக் கேட்டு குஹன், ராமன் சொன்னபடி செய்ய வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டான். பிறகு ராமன் ஸந்த்யோபாஸநம் செய்து, லக்ஷ்மணன் கொண்டுவந்த ஜலத்தைப் பானம்செய்து, பூமியில் ஸீதையுடன் படுத்துக்கொண்டான். லக்ஷ்மணனும், ஸுமந்த்ரனும் வில்லும்கையுமான குஹனும் கவனத்துடன் அவர்களை ரக்ஷித்துக்கொண்டு விழித்துக்கொண்டிருந்தார்கள். (ஸர்-50.)

ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 23

(53)இப்படிப் புலம்பிக்கொண்டிருந்த கௌஸல்யயை ஸுமித்ரை ஸமாதானம் பண்ணினாள். ராமனைப்பற்றி நீ துக்கப்படுவது தகுந்த தன்று. அவன் தர்மிஷ்டன். தகப்பனார் செய்த ப்ரதிஜ்ஞையை நிறை வேற்றுவதற்காக ராஜ்யத்தைவிட்டுக் காட்டுக்குப் போயிருக்கிறான். லக்ஷ்மணனைப் பற்றியும் ஸீதையைப்பற்றியும் துக்கப்பட வேண்டிய தில்லை. அவன் ராமனுக்குக் கைங்கரியம் பண்ணுவதாகிய உயர்ந்த காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறான். ஸீதையும் காட்டில் ஏற்படக்கூடிய கஷ்டத்தை அறிந்தும் ராமனுடன் கூடப் போகிறாள். உன் பிள்ளை தர்மிஷ்டன் என்கிற கீர்த்தியைப் பரவச் செய்யப்போகிறான். அவன் அடையாதது என்ன? ராமனுடைய சுத்தியையும் பெருமையையும் அறிந்து ஸூரியன் தாபத்தை உண்டு பண்ணான். காற்றும் ஸுகமாய் அவன்மேலே அடிக்கும் சந்திரனும் ராத்திரியில் படுத்துக்கொண்டிருக்கிற ராமனைத் தகப்பனாரைப் போல் தன் கிரணங்களால் கட்டிக்கொண்டு ஸந்தோஷப்படுத்துவன். ராமனுடைய வீர்யம் தெரியாதா? முன்னொரு ஸமயம் தண்ட காரண்யத்துக்குப்போய் வைஜயந்தம் என்கிற நகரத்தைத் தகைந்து, திமித்வஜன் பிள்ளையைக் கொன்று, அதினால் ஸந்தோஷம் அடைந்த ப்ரம்மாவிடமிருந்து அஸ்த்ரங்களை அவன் பெற வில்லையா? அவன் சூரன். காட்டிலிருந்தாலும் வீட்டிலிருப்பதுபோல் பயப்படான். அவன் சத்துருக்களை நாசம் பண்ணச் சக்தியுள்ளவன். அவனுடைய ஆளுகைக்குள் இந்தப் பூமி வராமலிராது. அவன் சீக்கிரம் திரும்பி வந்து அபிஷேகம் பண்ணப் பட்டு ராஜ்யத்தைக் கைக்கொள்ளுவன். ஆதலால், துக்கத்தை அடக்கிக்கொள் என்று. (44.)

(54) ராமன் போகும்போது அயோத்தியிலுள்ள ஜனங்கள் பின் தொடர்ந்துபோனார்கள். அவர்களைப் பார்த்து ராமன் "என்னிடத்தில் உங்களால் எவ்விதமான ப்ரீதியும் வெகுமானமும் வைக்கப்பட்டனவோ, அவைகளைப் பரதனிடத்தில் வைக்க வேண்டியது. இதனால் எனக்கு ப்ரீதி உண்டாகும். அவன் நல்ல நடத்தையுள்ளவன்; உங்களுக்குப் பிரியங்களையும் ஹிதங்களையும் எப்படிச் செய்யவேண்டியதோ, அப்படிச் செய்வன். அவன் வயதாலே சிறுவனாயிருந்தாலும், ஜ்ஞாநத்தாலே பெரியவன்; மிருதுவாயிருந்தாலும் வீர்யமுள்ளவன்; உங்களுக்கு உண்டாகும் பயங்களைப் போக்குவன்; உங்களுக்குத் தகுந்த ராஜாவாக இருப்பன் " என்று சொன்னான். ஜனங்கள் “ குதிரைகளே! திரும்புங்கள். நீங்கள் போகக்கூடாது. ராமனைப் பட்டணத்திலிருந்து காட்டுக்குக் கொண்டுபோகக்கூடாது." என்று புலம்பினார்கள். இதைக்கேட்டு ராமன் ரதத்திலிருந்து இறங்கி, ஸீதையுடனும் லக்ஷ்மணனுடனும் கால்நடையாக நடந்துபோனான். ப்ராம்மணர்கள், ”ராமா! நீ ப்ராம்மணர்களுக்கு அனுகூலனா யிருக்கிறவன். அக்னிகளை அரணியில் ஏற்றிக்கொண்டு ப்ராம்மணர்களான நாங்கள் உன் பின்னாலே வருகிறோம். வாஜபேயத்தாலே கிடைத்த குடைகளை உன்மேல் ஸூரிய கிரணங்கள் படாதபடி பிடிக்கிறோம். இதுவரையில் எங்கள் புத்தி வேதமந்திரங்களிலேயே இருந்தது. இப்பொழுது அஃது உன்னுடன்கூட வனத்துக்குப் போவதில் நிற்கிறது. ‘தனத்தை எப்படி விட்டு வரலாம்என்று கேட்கிறாயோ? எங்களுக்கு வேதம்தான் தனம். அஃது எங்கள் ஹிருதயத்திலிருக்கிறது. ‘உங்கள் ஸ்திரீகளை யார் ரக்ஷிப்பார்கள்என்று கேட்கிறாயோ? அவர்கள் பாதிவ்ரத்யமே அவர்களை ரக்ஷிக்கும். அவர்கள் வீட்டிலேயே இருக்கலாம். எங்களுடைய புத்தியானது உன்னைத் திருப்புவதில் நிலையாயிருக்கிறது. நீ காட்டுக்குப் போகிற நிச்சயத்தை விட்டு விடு. ப்ராம்மணர்கள் வாக்கியத்தைக் கேட்கவேணும் என்கிற தர்மத்தை நீயே அநுஷ்டிக்காவிட்டால், நாங்கள்மாத்திரம் எதற்காகத் தர்மத்தை அநுஷ்டிக்க வேண்டும். உன்னைத் தலையால் வணங்கிக் கேட்டுக் கொள்ளுகிறோம். நீ திரும்பு. அநேக யாகங்கள் எங்களால் ஆரம்பிக்கப்பட்டன. நீ திரும்பிவந்தால் தான் அவைகள் முடிவை அடையும். ஜங்கமங்களும் ஸ்தாவரங்களும் உன்னிடத்தில் பக்தி உள்ளவைகளாயிருக்கின்றன. அவர்களிடத்தில் உனக்கு ஸ்நேஹ மிருப்பதைக் காட்டு. மரங்களும் வேர்களால் தடுக்கப்பட்டு உன் பின்னால் வரமுடியாதவைகளாயிருக்கின்றன. ஆனால், காற்று அடிப்பதால் அசைந்தும் நேராக நின்றும் கைகளைத் தூக்கிக் கொண்டு கதறுகின்றன போலும். பக்ஷிகளும் பறப்பதும் ஆஹாரம் தேடுவதுமில்லாமல் மரங்களிலேயே இருந்துகொண்டு உன்னைத் தடுக்கின்றன என்றார்கள். இப்படி அவர்கள் சொல்லிக்கொண்டிருக் கையில் ரதம் தமஸை என்கிற நதியினிடம் வந்துசேர்ந்தது. அதுவும் போகிறவர்களைத் தடுப்பதுபோல் வழியிலிருந்தது. ஸுமந்திரன் களைத்த குதிரைகளுக்குத் தண்ணீர் காட்டி நதிக்கரையில் அவைகளை நடமாடும்படி விட்டான். (ஸ—45)

ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 22

(50) ராமனும் லக்ஷ்மணனும் ஸீதையும் தசரதனைப் ப்ரதக்ஷிணம் பண்ணி, விடை பெற்றுக்கொண்டு, கௌஸல்யைக்கும் ஸுமித்ரைக்கும் நமஸ்காரம் பண்ணினார்கள். ஸுமித்ரை லக்ஷ்மணனைப் பார்த்து "நீ வநவாஸத்துக்காக உண்டுபண்ணப் பட்டிருக்கிறாய். நீ ராமனிடத்தில் அன்புள்ளவன். ராமன் போகையில் அவன் அழகைப்பார்த்து அதில் ஈடுபட்டு மெய்மறந்து போய் அவனை ரக்ஷிப்பதில் கவனக் குறைவுள்ளவனாக இராதே. அவனுக்கு ஆபத்து வந்தாலும் ஸம்பத்து வந்தாலும் அவன் தான் உனக்குக் கதி. தமயன் வசத்திலிருப்பது ஸத்துக்களின் தர்மம். இப்படி இருப்பது இந்தக் குலத்துக்குத் தகுந்தது. ராமனைத் தசரதனாகவும், ஸீதையை நானாகவும், காட்டை அயோத்யையாகவும் நினை. குழந்தாய்! சுகமாகப்போய் வா" என்று புத்தி சொன்னாள். ஸீதையும் ராமனும் லக்ஷ்மணனும் ரதத்தில் ஏறிக் கொண்டார்கள். ஸுமந்திரன் ரதத்தை வேகமாக ஓட்டினான். நகரத்து ஜனங்கள் குழந்தைகள் விருத்தர்கள் உள்பட மிகுந்த துக்கத்துடன் ரதத்துக்குப் பின்னாலே போனார்கள். அவர்கள் கண்ணும் கண்ணீருமாய்ப் பக்கத்திலும் பின்னாலும் நின்றுகொண்டு " ஸூத/ கடிவாளத்தையிழுத்துக்கொண்டு ரதத்தை மெல்லவிடு. ராமன் முகத்தை நாங்கள் பார்க்க வேண்டும். ராமன் தாயார்மனது இரும்பால் செய்யப் பட்டதோ? அவன் காட்டுக்குப்போவதைப் பார்த்தும் அவள் மனது வெடிக்கவில்லையே. ஸீதை மஹாபாக்யம் பண்ணினவள். பர்த்தாவுடன் அவன் நிழலைப்போல் கூடப் போகிறாள். ! லக்ஷ்மணா நீ தமையனுக்குப் பணிவிடை செய்யப்போகிறாயே. நீ க்ருதார்த்தன் " என்று இப்படிச்சொல்லிப் பெருகுகிற கண்ணீரைத் தடுக்கமுடியாதவர் களாயிருந்தார்கள். தசரதனும் கௌஸல்யையும் மற்ற ராஜஸ்திரீகளும் ராமனைப்பார்க்க வெளியே வந்து "நில்லு நில்லு" என்று ஸுமந்த்ரனைச் சொன்னார்கள். ராமனோ சீக்கிரம் போ என்று சொல்ல,ஸூதன் இன்னது செய்கிறது என்று தெரியாமல் திகைத்தான். கடைசியில் ராமன் சொன்னபடி ரதத்தை வேகமாய் ஓட்டினான். "புறப்பட்டுப்போகிறவன் திரும்பி வரவேண்டும்என்று எண்ணமிருந்தால் அவனைப் பின்தொடர்ந்து போகக்கூடாது என்று மந்திரிகள் சொல்ல, தசரதன் அதைக்கேட்டு அங்கே நின்றுவிட்டான். (-40.)

(51) ராமன் புறப்பட்டுப்போகையில், அந்தப்புரத்தில் ஸ்திரீகளின் பலமான அழுகைக்குரல் உண்டாயிற்று. நாதனில்லாத இந்த ஜனங்களுக்கு நாதனும் கதியும் ஆனவன் எங்கேயோ போகிறானே? ராமன் தன்னை எவனாவது வைதாலும் கோபித்துக் கொள்வதில்லை. கோபமுண்டாக்குகிறவைகளை விலக்குகிறவன். கோபித்துக் கொண்டவர்களிடம் நல்ல வார்த்தை சொல்பவன். நாம் துக்கப்பட்டால் அவனும் துக்கப் படுவான். இப்படிப்பட்டவன் எங்கேயோ போகிறானே? தன் தாயாரான கௌஸல்யையிடத்தில் எப்படி இருந்தானோ, அப்படியே நம்மிடங்களிலுமிருந்தானே. இந்த மஹாத்மா எங்கேயோ போகிறானே. பிரியமான பிள்ளையைக் காட்டுக்கு ராஜா அனுப்புகிறானே. அவனுக்குப் புத்தியில்லையோ ?” என்றார்கள். ஏற்கனவே பிள்ளையைப் பிரிந்து துக்கப்பட்டுக்கொண்டிருக்கும் ராஜா இந்த அழுகைக் குரலைக்கேட்டு, அதிக துக்கத்தை அடைந்தான்.ஸூர்யன் தேஜஸு குறைந்தவனாய்விட்டான். யானைகள் வாயிலிருந்த கவளங்களை உமிழ்ந்துவிட்டன. பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டக் கொடுக்கவில்லை. முதன்முதலாக பிள்ளையைப் பெற்றும் தாய்மார்கள் ஸந்தோஷப் படவில்லை.காற்றினால் அலைக்கப்பட்ட ஸமுத்ரத்தைப் போல நகரம் நடுநடுங்கிற்று. எல்லாரும் தைந்யத்தை அடைந்து, சாப்பாட்டிலும் விளையாட்டிலும் மனதை வைக்க வில்லை. எல்லாரும் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, ராஜாவை நிந்தித்தார்கள். குழந்தைகள் தாயின் பாலைத் தேடவில்லை. பர்த்தாக்கள் மனைவிகளைத் தேடவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் விட்டு ராமனையே நினைத்துக்கொண்டிருந்தார்கள். ராமனுடைய ஸுஹ்ருத்துக்கள் துக்கத்தாலே பீடிக்கப்பட்டுப் படுக்கைகளைவிட்டு எழுந்திருக்க வில்லை. இப்படி அயோத்யை இருந்தது. (-41)

.
(52) ராமனுடைய ரதம் போகும்பொழுது கிளம்பின தூளி கண்ணில்பட்டவரையில், தசரதன் அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் மறைந்தபோது, அவன் கீழே விழுந்தான். அவன் வலது தோளைக் கௌஸல்யையும், இடது தோளைக் கைகேயியும் பிடித்துக்கொண்டு தூக்கப்போனார்கள். அவன் கைகேயியைப்பார்த்து, "துஷ்டநடக்கையுள்ளவளே! நீ என் உடம்பைத் தொடாதே. உன்னைப் பார்க்க நான் விருப்ப மில்லை. நீ எனக்கு மனைவியும் அன்று; பந்துவும் அன்று. உன்னைக்கொண்டு பிழைப்பவர்கள் எனக்கு வேலைக்காரர்கள் அன்று. நான் அவர்களுக்கு ஸ்வாமியும் அன்று. தர்மத்தைவிட்டு அர்த்தத்தையே நினைக்கிற உன்னை நான் விட்டுவிடுகிறேன். பரதன் ராஜ்யத்தை அடைந்து ஸந்தோஷப் படுவானேயானால், அவன் பண்ணுகிற தர்ப்பணம் என்னைச் சேரவேண்டாம்" என்று சொன்னான். அப்பொழுது கௌஸல்யை ராஜாவைத் தூக்கிக் கொண்டு திரும்பினாள். ராஜாவும் ராமன் காட்டில் என்ன கஷ்டப்படுவனோ?’ என்று புலம்பிக்கொண்டு பட்டணத்துக்குள் நுழைந்து துவாரபாலகர்களை அழைத்து என்னைக் கௌஸல்யை க்ருஹத்துக்குக் கொண்டுபோய் விடுங்கள் என்று கட்டளையிட்டான். அவர்களும் அப்படியே செய்தார்கள். அங்கே போனபின், "ஐயோ! ராமா! என்னை விட்டுவிடுகிறாயே!" என்று அலறினான். "ராமன் திரும்பிவருகிறவரையில் எவர்கள் பிழைத்திருந்து அவனைக் கட்டிக்கொண்டு காண்பார்களோ, அவர்கள் அல்லவோ பாக்யசாலிகள்" என்று புலம்பினான். நடுராத்திரியில் கௌஸல்யையைப் பார்த்து, *"ராமன் பின்னால் போன என் கண்கள் இன்னும் திரும்பிவரவில்லை. உன்னை நான் பார்க்க முடியவில்லை. கையினால் என்னை நன்றாய்த் தடவிக்கொடு" என்று சொன்னான். இதைக்கேட்டு கௌஸல்யை அவன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு புலம்பினாள். (-42) "கைகேயி தனது க்ரூரத்தன்மை என்னும் விஷத்தை ராமனிடத்தில் கக்கி விட்டு, சட்டை உரித்த பாம்பைப்போல் இருக்கப்போகிறாள். ராமனைக் காட்டுக்கு அனுப்பித் தன் இஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்ட இவள், வீட்டிலிருக்கும் துஷ்டப்பாம்பைப்போல் எனக்குப் பயத்தை உண்டாக்குவளே. ராமன் ராஜ்யத்தைப் பெறாவிட்டாலும் இங்கேயே பிச்சை எடுத்துக்கொண்டிருக்கக் கூடாதா? காட்டுக்கு அனுப்புவதைக்காட்டிலும் பரதனுக்கு வேலைக்காரனாகச் செய்வது நல்லதன்றோ? பர்வகாலத்தில் இஷ்டி பண்ணுகிறவர்கள் உமியை ராக்ஷஸர்களுக்குக் கொடுப்பதுபோல, கைகேயி, ராமனை ராஜ்யத்தைவிட்டுத் துரத்தி, காட்டுக்கு அனுப்பி அவனை ராக்ஷஸர்களுக்குப் பலியாகக் கொடுத்துவிட்டாளே. அவன் ஸீதையுடனும் லக்ஷ்மணனுடனும் காட்டுக்குள் பிரவேசித்திருப்பானோ? அங்கே எந்த அவஸ்தையை அடைகிறானோ? ஸுகப்படத் தகுந்தகாலத்தில் அதற்கு மாறாக அவர்கள் காட்டுக்குப்போய்க் காய்கிழங்குகளை எப்படிச் சாப்பிட்டுக்கொண்டிருப்பர்கள்? என்னுடைய துக்கம் முடியும் காலம் வருமா? அவர்கள் திரும்பிவருவதை நான் பார்ப்பனோ? அவர்களைக்கண்டு பர்வகாலத்தில் ஸமுத்ரத்தைப்போல இந்த நகரம் ஸந்தோஷப்படுமா? எல்லாரும் அவர்கள் மேலே பொரிகளை இறைப்பார்களா? ப்ராம்மணக் கன்னிகைகள் புஷ்பங்களையும் பழங்களையும் கொடுத்துக்கொண்டு நகரத்தை ப்ரதக்ஷிணம் பண்ணுவார்களா? குழந்தைகள் தாயார் ஸ்தன்யபானம் பண்ணப்போகையில் அவர்கள் அதைச் செய்யவொட்டாமல் முன் ஜன்மத்தில் நான் செய்திருக்கவேண்டும். ஆகையால்தான் பிள்ளையைவிட்டுப் பிரிந்திருக்கிறேன். கன்றைவிட்டுப் பிரிந்த பசுவைப்போல் அவனைவிட்டுப் பிரிந்து பிழைத்திருக்க விருப்பமில்லை. பிள்ளையை விட்டுப்பிரிந்த சோகாக்னி என்னைக் கொளுத்துகிறது என்று. (-43)


————————————————————————————————————————————————————————————–

*ராமனுடன்கூட என்னாலே போகமுடியவில்லை. என் கண்களோ அவன் பின்னாலேபோய்த் திரும்பிவராமல் அவனிடமே இருக்கின்றன. என்னைக்காட்டிலும் அவைகள் அதிக பாக்யம் பண்னினவைகள் என்று கருத்தாகும். ‘நன்றாய்என்பதற்கு கைகேயியுடன் ஸங்கேதம் பண்ணிக்கொண்டு ராமனைக் காட்டுக்கு அனுப்பினான் என்று எண்ணாமல், "ஐயோ! அவள் மாயவலையில் அகப்பட்டு, மனமில்லாமல் ராமனை அனுப்பிவிட்டு வருத்தப்படுகிறானே என்று இரக்கத்துடன் தொடு" என்று கருத்தாகும். இந்திரியமிருப்பதை அதன் வேலையாலே அறியவேண்டும். கண் காணாதபடியால் சக்ஷுரிந்திரியம் போய்விட்டது. த்வகிந்திரியம் இருக்கிறதோ என்று பார்க்க வேண்டும். அதற்காகத் தடவிப்பார் என்பது தசரதன் கருத்து. ‘நன்றாய் என்பதற்கு ராமன் தாயார் தடவிக்கொடுத்தால் ராமன் தடவிக்கொடுத்தது போலாகும் என்பது கருத்து.

————————————————————————————————–
————————————————————————————————–

ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 21

47) ஸுமந்த்ரன் அப்போது கைகேயியைப் பார்த்து கோபத்தோடுகூட "உன்னுடைய பர்த்தாவான தசரதன் ஸ்தாவர ஜங்கமங்களுள்பட எல்லாவற்றுக்கும் ராஜா; அவனை நீ விட்டு விட்டாய். இதைக்காட்டிலும் மேலான அகார்யம் இல்லை; நீ பதியைக் கொல்லுகிறவள்; குலத்தையும் நாசம்பண்ணுகிறவள்; உன் செய்கைகளால் அவருக்குத் தாபத்தை உண்டுபண்ணுகிறாய். அவரை வருத்தப்படுத்தாதே. கோடிப் பிள்ளைகளைக்காட்டிலும் பர்த்தாவின் இச்சை உயர்ந்தது. இக்ஷ்வாகு குலக்கிரமப்படி ராஜாவுக்குப் பின்னாலே வயதுமுறைப்படி பிள்ளைகள் ராஜ்யத்தை அடையவேண்டியது. அதைக் கெடுக்க இச்சிக்கிறாய்.உன் பிள்ளை ராஜாவாக ஆகட்டும் எங்கே ராமன் போகிறானோ, அங்கே நாங்கள் போகிறோம். உன் தேசத்தில் ஒரு பிராமணனும் இருக்கத் தகுந்தவன் அன்று. அவ்விதமான தகாத கர்மத்தைச் செய்ய விரும்புகிறாய். உன்னுடைய இந்த நடத்தையைப் பார்த்து பூமி வெடிக்கவில்லையே. இஃது ஆச்சர்யம். தபஸால் ஜ்வலிக்கிற பெரிய ருஷிகள் உன்னை திக்என்று சபிக்கவில்லையே. மாமரத்தைக் கோடாலியால் வெட்டிவிட்டு, வேப்பமரத்துக்குப் பால் வார்த்து வளர்த்தாலும், அதன் பழம் மதுரமாகுமோ? தாயாரைப் போல் பெண் இருப்பாள் என்கிற பழமொழி பொய்யன்று. முன்னாளில் உன் தகப்பனாருக்கு எல்லா ப்ராணிகளுடைய வார்த்தைகளும் தெரியட்டும் என்று வரம் ஒருவர் கொடுத்திருந்தார். பிறகு எறும்புகள் பேசிக்கொண்டு போனதைக் கேட்டு அவன் சிரிக்க, உன் தாயார் அதற்குக் காரணத்தைக் கேட்டாள். அவன் அதைச் சொன்னால், தனக்கு மரணம் வரும் என்று சொல்ல, அவள் "உனக்கு மரணம் வந்தாலும் வரட்டும்; அதைச் சொல்லவேண்டும்" என்று நிர்ப்பந்தம் செய்தாள். வரம் கொடுத்தவரின் ஆலோசனைப்படி அவளை அவன் தள்ளிவிட்டான். அப்படிப்பட்டவள் பெண்ணன்றோ நீ " என்று கடுமையாக நிந்தித்தான். இதனால் கைகேயிக்குக் கோபமும் வரவில்லை; முகமும் வாடவில்லை. (-35)

(47) தசரதன் ஸுமந்த்ரனைப் பார்த்து, "பரதன் ராஜ்யத்தை ஆளட்டும்; நிறைந்த தன தான்யங்களுடன் சதுரங்கஸேனையை ராமனுடன் கூட அனுப்பு என்று கட்டளையிட்டான். இதைக்கேட்டுக் கைகேயி பயமடைந்து, நீர் சொன்னபடியே செய்தால் ராஜ்யம் சூன்யமாய் விடாதா? அதைப் பரதன் எப்படி வேண்டுவன்? என்று வெட்கமில்லாமல் கேட்டாள். தசரதன், "என்னை ஏன் பீடிக்கிறாய்? ராமன் காட்டுக்குப் போகவேண்டுமென்றுதானே கேட்டாய். அவனுடன் ஸேனைகளை அனுப்பக்கூடாது என்று சொல்லவில்லையே ?" என்று சொன்னான். கைகேயி இதைக் கேட்டு மிகவும் கோபித்து, "உம்முடைய குலத்திலேயே, ஸகரன் மூத்தபிள்ளையான அஸமஞ்ஜனைக் காட்டுக்கு அனுப்ப வில்லையா? அப்படியே நீயும் செய்யவேண்டியது என்று சொல்ல, தசரதன் திக்என்று மாத்ரம் சொன்னான். எல்லாரும் வெட்கத்தை அடைந்தார்கள். அவள் அதை அறியவில்லை. அப்போது ஸித்தார்த்தன் என்கிற ப்ரதானமந்திரி, "அஸமஞ்ஜன், அயோத்தி யிலிருந்த குழந்தைகளை ஸரயூநதியில் போட்டு போட்டு ஸந்தோஷமாய்ப் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்காக அவன் ராஜ்யத்தை விட்டுத் துரத்தப்பட்டான். ராமன் அப்படிப்பட்ட குற்றம் என்ன செய்தான்? ஒரு தோஷமும் அவனிடத்தில் இல்லையே, இருந்தால் சொல்லு. துஷ்டனல்லாமல் நல்லவழியிலிருப்ப வனைத் தேசத்தை விட்டுத் துரத்துவதான குற்றம் இந்திரனையும் கொளுத்துமே. ஆகையால், ராமனுக்கு வரும் லக்ஷ்மியைத் தடுக்காதே. உலகத்தார் பழியைச் சுமக்காதேஎன்று சொன்னான். இதைக் கேட்டு, ராஜா கைகேயியைப் பார்த்து,"இந்த வார்த்தையை நீ கேட்கவில்லையே. எனக்கும் உனக்கும் ஹிதத்தை அறிய வில்லையே. நல்ல மார்க்கத்தைவிட்டுக் கெட்டவழியை அநுஸரிக் கிறாய். ராஜ்யத்தையும் ஸுகத்தையும் விட்டுவிட்டு நானும் ராமனுடன் கூடப்போகிறேன். நீயும் உன் பிள்ளையும் ராஜ்யத்தை ஸுகமாக ஆளுங்கள்" என்று சொன்னான். (– 36) ஸித்தார்த்தன் சொன்னதைக்கேட்டு ராமன் "நான் போகங்களையும், விஷயங்களில் இருக்கும் பற்றையும் விட்டுவிட்டேன். காட்டில் அகப்படுவதைக்கொண்டு ஜீவிக்கப்போகிறேன். எவனாவது என்னுடன் கூடவருவதால் எனக்கு என்ன ப்ரயோஜனம்? யானையைக் கொடுத்துவிட்டவனுக்கு அதைக் கட்டுகிற கயிற்றால் என்ன ப்ரயோஜனம்? ! ராஜாவே! எல்லாவற்றையும் பரதனுக்குக் கொடுக்கிறேன். எனக்கு மரவுரியையும் மண்வெட்டியையும் கூடையையும் கொண்டுவந்து கொடுக்கவேண்டும்" என்று சொன்னான். (-37)

(49) அப்போது கைகேயி, தானே ராமனுக்கு மரவுரிகளைக் கொண்டுவந்து கொடுத்து வெட்கமில்லாமல் உடுத்துக் கொள்என்று சொன்னாள். அவன் அவைகளைப் பெற்றுக் கொண்டு முன்பு கட்டிக்கொண்டிருந்த மெல்லியதான வஸ்திரத்தை எறிந்துவிட்டு ருஷி வஸ்திரங்களை உடுத்துக்கொண்டான். லக்ஷ்மணனும் அப்படியே செய்தான். ஸீதையும் மரவுரியை வாங்கிக்கொண்டு அதை உடுத்துக்கொள்ளத் தெரியாமல் கண்ணுங்கண்ணீருமாய் ராமனைப் பார்த்து, "காட்டிலிருக்கும் ருஷிகள் எப்படி மரவுரிகளை உடுத்துக்கொள்ளுகிறார்கள்" என்று கேட்டாள். ராமன் அவளுடைய பட்டுவஸ்திரத்தின் மேலே அந்த மரவுரியைக் கட்டினான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப்புர ஸ்திரீகள் கண்ணீரைவிட்டு, "ராமா! நீ லக்ஷ்மணனுடன் காட்டுக்குப்போ. ஸீதை வனவாஸத்துக்குத் தகுந்தவள் அல்லள். அவள் இங்கேயே இருக்கட்டும்" என்று சொன்னார்கள். வஸிஷ்டரும் கைகேயியைப் பார்த்து, அவளை நிந்தித்து, "ஸீதை காட்டுக்குப் போகவேண்டாம். ராமனுக்குக் கொடுப்பதாகச் சொன்ன ஸிம்மாஸனத்தில் இவள் இருக்கட்டும். கிருஹஸ்தனுக்கு அவன் பாரியை ஆத்மா. ஆகையால், அவள் இது ராமனுடையதென்று பூமியையாளட்டும். அவள் ராமனுடன் கூடப்போனால் நாங்களும் இந்தப் பட்டணமும் கூடப்போவோம். பரதனும் சத்ருக்கனும் மரவுரியைக் கட்டிக் கொண்டு காட்டில் இருக்கும் தமையனிடம் போவார்கள். சூன்யமான நகரத்தை நீ ஆளு. ராமன் எங்கு இருப்பானோ, அது நகரம்; அவன் எங்கே இல்லையோ அது காடு. ஸீதையிடமிருந்து மரவுரியை வாங்கிக்கொண்டு, உயர்ந்த ஆபரணங்களைக் கொடு" என்று சொன்னார். இதனாலும், ஸீதையினுடைய மனம் திரும்பவில்லை. (– 37.) தசரதனும், ஸீதை மரவுரியைக் கட்டிக்கொள்ளாமல் வனம்செல்லட்டும் என்று வஸிஷ்டரைப் போலச் சொல்லி, பிழைத்திருப்பதில் ஆசையைவிட்டு பிள்ளையை விட்டுப் பிரிவதாகிய துக்கத்தில் முழுகி பூமியில் விழுந்தான். ராமன் அவனைப் பார்த்து "பிள்ளையின் பிரிவினால் கௌஸல்யைக்கு எப்படித் துக்கம் உண்டாகாதோ, அப்படி அவளிடத்தில் அபிமாநம் பண்ணவேண்டும்" என்று சொல்லி, காட்டுக்குப்புறப்பட்டான். (-38) ராஜா ஸுமந்த்ரனைக் கூப்பிட்டு "ரதத்தைக் கொண்டு வந்து இவர்களைக் கொண்டுபோய் விடு" என்று சொன்னான். அவனும் அப்படியே ரதத்தைக் கொண்டுவந்து ராமனிடம் தெரிவித்தான். கௌஸல்யை ஸீதையைக் கட்டிக் கொண்டு "உலகத்தில் ஸ்திரீகளின் ஸ்வபாவம் சஞ்சலம்; கஷ்டம் வந்தபோது பர்த்தாவினிடத்தில் கௌரவம் பண்ணுவதில்லை. உயர்ந்த குலமும், செய்த உபகாரங்களும், ப்ரீதியுடன் வஸ்திரங்களையும் ஆபரணங்களையும் கொடுத்ததும், அவன் செய்த பாணிக்ரஹணமும் அவர்கள் மனதில் படுகிறவைகள் அல்ல. பதிவ்ரதைகளுக்குப் பர்த்தாவே தெய்வம். என் பிள்ளை காட்டுக்குப் போகிறான் என்று அவனை அவமதிக்காதே. அவனுக்குத் தனமிருந்தாலும் இல்லாவிட்டாலும், அவன் உனக்குத் தெய்வம் என்று சொன்னாள். இதைக் கேட்டு ஸீதை அஞ்ஜலிபண்ணிக்கொண்டு அம்மா! நீ எது சொல்லுகிறாயோ, அதையெல்லாம் நான் செய்கிறேன். நான் பர்த்தாவினிடம் எப்படி இருக்கவேண்டும் என்பதை அறிந்திருக்கிறேன்; பெரியோர் களிடமிருந்து கேட்டும் இருக்கிறேன். என்னைக் கெட்ட ஸ்திரீகளுக்கு ஸமமாக எண்ணவேண்டாம். சந்த்ரனைவிட்டு ப்ரபையைப் பிரிக்கமுடியாததுபோல, தர்மத்தைவிட்டு என்னைப் பிரிக்கமுடியாது. தந்தி இல்லாத வீணை வாசிக்காது. சக்ரம் இல்லாத ரதம் ஓடாது. நூறு பிள்ளைகளிருந்தாலும் பர்த்தா இல்லாத ஸ்திரீக்கு ஸுகம் கிடையாது.தாயும் தகப்பனும் பிள்ளையும் கொஞ்சம் ஸௌக்யத்தைத்தான் கொடுப்பார்கள். அளவில்லாத ஸுகத்தைக்கொடுப்பவன் பர்த்தாதான். அப்படிப் பட்டவனை எவள்தான் பூஜிக்கமாட்டாள். இவ்விதமான பதிவ்ரதா தர்மத்தை அறிந்த நான் பர்த்தாவை அவமதிப்பேனா?" என்று சொன்னாள். ராமனும் தாயாரைப் பார்த்து,” அம்மா! துக்கப்படாதே. தகப்பனாரைப் பார்த்துக்கொள். வனவாஸம் சீக்கிரம் முடிந்துவிடும். பதினான்கு வர்ஷங்களும் ஒரு ராத்திரி தூக்கம் போல் போய்விடும்" என்று சொல்லி, மற்றத் தாயார்களையும் பார்த்து "அறியாமையாலோ, அல்லது அதிகப் பழக்கத்தாலோ, நான் ஏதாவது கடுமையாகப் பேசியிருந்தாலும் அதை க்ஷமிக்கவேண்டும். விடை கொடுக்க வேண்டும்" என்று சொன்னான். இதைக்கேட்டு எல்லோரும் அழுதார்கள். (-39)

வால்மீகி ராமாயண சாரம் 20

(45) ராமனும் ஸீதையும் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு, அங்கு முன்னாலே வந்திருந்த லக்ஷ்மணன், தமையன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டு ஸீதையையும் அவனையும் பார்த்து ப்ரார்த்தித்தான்: "நீ காட்டுக்குப்போக நிச்சயம் பண்ணினால் நானும் வில்லுங்கையுமாய் உன்னுடன் வருவேன். நான் உன்னைவிட்டு இந்த உலகங்களின் ஐசுவரியத்தையும், ஆத்மாவின் அநுபவத்தையும், மோக்ஷநந்தத்தையும் வேண்டேன்" என்று. ராமன் இதை ஒப்புக்கொள்ளாமல் தடுக்க, லக்ஷ்மணன் முன்னாலேயே எனக்கு அநுமதி கொடுத்திருக்கிறாய் இப்போது ஏன் என்னைத் தடுக்கிறாய்? நான் உன்னுடன் கூடப் போக ஆசைப்படுகையில், என்னைத் தடுப்பதற்கு என்ன காரணம்? ஸந்தேஹமுண்டாகிறது" என்று கேட்டான். ராமன் ‘லக்ஷ்மணா! நீ என்னிடத்தில் ஸ்நேஹமுள்ளவன்; தர்மத்தில் பிரீதியுள்ளவன்; நீ வீரன்; எப்போதும் நல்லவழியிலிருக்கிறவன்; நீ எனக்கு ப்ரியமானவன்; என் பிராணனுக்கு ஸமமானவன்; நான் சொன்னபடி நடக்கிறவன்; எனக்குத் தம்பியாயும் தோழனாயு மிருக்கிறவன். நீ என்னுடன்கூட வந்தால், கௌஸல்யை
யையும் ஸுமித்ரையையும் எவன் ரக்ஷிப்பன்? ராஜா ரக்ஷிக்க மாட்டாரோ என்று கேட்கிறாயோ? அவர் காமபாசங்களாலே கட்டுப்பட்டிருக்கிறார். கைகேயியும் ராஜ்யத்தை அடைந்து ஸபத்நிகளுக்கு நல்லத்தைச் செய்யாள். பரதனும் ராஜ்யத்தை அடைந்து தாயார் சொன்னபடி நடக்கிறவனாய்,கௌஸல்யையை யும் ஸுமித்ரையையும் நினைக்கமாட்டான். ராஜாவின் அநுக்ரஹத்தாலோ அல்லது நீயாகவோ கௌஸல்யையை ரக்ஷி. நான் சொன்னதைச் செய். இப்படியிருந்தால் என்னிடத்தில் உனக்கு இருக்கும் பக்தியைக் காட்டினதாக ஏற்படும். பெரியோர்களுக்குப் பூஜை செய்வதாலே உயர்ந்த தர்மத்தையும் அடைவாய்" என்று பதில் சொன்னான். லக்ஷ்மணன்-“நீ எனக்கு இட்ட வேலையைப் பரதன் நல்லமனதுடன் செய்வன். இதில் ஸந்தேஹமில்லை. இஃது உன் தேஜஸாலேயே நடக்கும். என்னைப் போன்ற ஆயிரம் பேர்களையும் என் தாயாரையும் கௌஸல்யை ரக்ஷிப்பள். அவள் ஜீவனத்துக்கு ஆயிரம் கிராமங்கள் இருக்கின்றன. என்னை உனக்குச் சேஷனாகப் பண்ணு. அதற்குத் தகாததாக என்னிடத்தில் ஒன்றுமில்லை. நான் இயற்கையாகவே உனக்குச் சேஷன்.* நீ இயற்கையாகவே எனக்கு ஸ்வாமி. இதனால் என்ன ப்ரயோஜநம் என்று கேட்கிறாயோ? இருவருக்கும் ப்ரயோஜநம் உண்டு. உனக்கு ஆச்ரமத்தைக் கட்டி, காய் கிழங்குகளைக் கொண்டுவந்து கொடுத்து, மற்ற எல்லா வேலைகளையும் செய்வேன்; எனக்கும் உன் கைங்கர்யமாகிய ப்ரயோஜனம் கிடைக்கும்; இதுதான் சேஷனான நான் வேண்டுவது. வில்லையும் பாணங்களையும், மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக் கொண்டு வழியைக் காட்டிக்கொண்டு முன்னாலே போகிறேன். தபஸ்விகளுக்கு வேண்டிய பழங்களையும் கிழங்குகளையும் எப்போதும் கொண்டு வருகிறேன். நீ ஸீதையுடன் மலைச்சார்வுகளில் விளையாடு. நீ விழித்திருக்கும்போதும் தூங்கும்போதும் எல்லாவற்றையும் செய்கிறேன் என்று மறுபடியும் வேண்டினான். இதைக் கேட்டு ராமன் ஸந்தோஷப்பட்டு லக்ஷ்மணன் கூடவருவதை ஒப்புக்கொண்டு, எல்லா ஆயுதங்களையும் கொண்டு வரச் சொன்னான். லக்ஷ்மணனும் அதை உடனே செய்தான்.(ஸ-31)

—————————————————————————–
* ராமன் பகவான் ; லக்ஷ்மணன் ஜீவன்; ஜீவனைப் பகவான் தன் பிரயோஜனத்துக்காகவே சேஷனாகப் பண்ணிக்கொண்டு கைங்கர்யத்தைப் பெறவேண்டியவன்; ஜீவனும் கைங்கரியத்தைச் செய்து கிருதார்த்தனாகிறான். இப்படி ஜீவன் பகவானை ப்ரார்த்திக்க வேண்டும் என்று லக்ஷ்மணன் உலகத்துக்கு வெளியிட்டான்.

——————————————————————————————————-

(46) பிறகு ராமனும் ஸீதையும் தங்களுடைய எல்லாத் தனங்களையும் குரு புத்திரரான ஸுயஜ்ஞருக்கும் மற்ற ப்ராம்மணர்களுக்கும் பரிவாரங்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார்கள். (ஸ-32) பிறகு அவர்களும் லக்ஷ்மணனும் தசரதன் அரண்மனைக்குப் போனார்கள். வழியில் ஜனங்கள் அவர்களைப் பார்த்து வருத்தப் பட்டுக்கொண்டு அடியில் வருமாறு பேசிக் கொண்டிருந்தார்கள் – "எவன் போகும்போது சதுரங்கபலம் பின்னால் போகுமோ, அவன் கால்நடையாய்ப் போகிறானே. லக்ஷ்மணன் ஒருவன்தானே அவன் பின்னாலே போகிறான். எந்த ஸீதையை ஆகாசத்தில் ஸஞ்சரிக்கிறவர்களும் பார்க்கமுடியாதோ, அவளை ராஜமார்க்கத்தில் எல்லோரும் பார்க்கிறார்களே; நல்ல ரக்த வர்ணமுள்ள சந்தனத்தைப் பூசிக்கத்தகுந்தவளுக்கு மழையும் வெய்யிலும் குளிரும் வர்ணத்தின் வேறுபாட்டை உண்டுபண்ணப் போகின்றன. பிரியமான பிள்ளையைத் தசரதன் காட்டுக்கு அனுப்புவானோ? அவனுக்குப் பேய் பிடித்திருக்கவேண்டும். குணமில்லாத பிள்ளையையும் பிதா காட்டுக்கு அனுப்பமாட்டானே. எவனுடைய நடத்தையினால் இந்த உலகம் அவன் வசமாயிருக்கிறதோ, அவனை எந்தப் பிதா அனுப்புவான்? ராமன் எந்த வழியாய் போகிறானோ, நாமும் அந்த வழியாய் அவன் பின்னால் போவோம். சூன்யமான இந்த நகரத்தைக் கைகேயி பாலனம் பண்ணட்டும். எங்கே ராமன் போகிறானோ, அதுவே நகரம். நம்மால் விடப்பட்ட நகரம் வனமாகட்டும் " என்று ஜனங்கள் புலம்பினார்கள். இதைக் கேட்டுக்கொண்டு ராமன் மனது கலங்காமல் தகப்பன் அரண்மனைக்குச் சென்றான். (ஸ 33) தசரதன் கௌஸல்யை முதலான எல்லாப் பாரியைகளையும் வருவித்து வைத்துக்கொண்டு ராமனைக் கூப்பிடச் சொன்னான். தசரதன் உள்ளே வந்த ராமனைப் பார்த்து, அவனிடம்போக எழுந்திருந்துபோய், நடுவில் மூர்ச்சை அடைந்து கீழே விழுந்தான். ராமனும் லக்ஷ்மணனும் அவனைத் தூக்கி ஆஸனத்தில் உட்காரவைத்தார்கள். ஒரு முகூர்த்தமான பிறகு, அவனுக்கு ப்ரஜ்ஞை திரும்பி வந்தது. அவனைப்பார்த்து ராமன், "எனக்கும் ஸீதைக்கும் லக்ஷ்மணனுக்கும் காட்டுக்குப்போக அனுமதி கொடுக்க வேண்டும் பல காரணங்களால் இவர்களைத் தடுத்தேன் ; அது முடியவில்லை" என்று வேண்டினான். தசரதன், "கைகேயிக்கு வரம் கொடுத்து ஏமாந்து போனேன். என்னை அடக்கிவிட்டு நீ அயோத்யைக்கு ராஜாவாயிரு" என்று சொன்னான். ராமன் அஞ்சலி செய்துகொண்டு, "நீர் ஆயிரம் வர்ஷங்கள் ராஜாவாக இரும். நான் காட்டில் வஸிக்கிறேன். எனக்காக நீர் சொன்னதைச் செய்யாதிருக்க வேண்டாம். பதினான்கு வர்ஷம் அங்கிருந்து ப்ரதிஜ்ஞையை நிறைவேற்றித் திரும்பிவந்து உம்முடைய திருவடிகளைப் பிடித்துக்கொள்ளுகிறேன்” என்று பதில் சொன்னான். அப்போது கைகேயியினால் தூண்டப்பட்ட தசரதன் மறுபடியும் "ஸுகமாயும் பயமில்லாததாயுமிருக்கிற மார்க்கத்தாலே போய்த் திரும்பிவந்து ச்ரேயஸையும் அபிவிருத்தியையும் அடை. தர்மத்திலும் ஸத்யத்திலும் மனதை வைத்திருக்கிற உன்னை அவைகளிலிருந்து திருப்ப முடியாது. ஆனால் இன்று ராத்திரி போகாதே; ஒரு நாளாவது உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்" என்று சொன்னான். ராமன் "நான் ஒரு க்ஷணம்கூட இங்கே இருக்க முடியாது. துக்கத்தை அடக்கிக் கொள்ளும். கைகேயி என்னைக் காட்டுக்கு இப்போதே போ என்று சொன்னதை ஒப்புக்கொண்டு, ‘நான் போகிறேன்’ என்று சொன்னேன். அதை ஸத்யமாகப் பண்ணவேண்டும் " என்று பதில்சொன்னான். தசரதன் ராமனை ஆலிங்கனம் பண்ணிக் கொண்டு மூர்ச்சையை அடைந்தான். கைகேயி தவிர, மற்ற பார்யைகளும் ஸுமந்த்ரனும் உரக்க அழுது மூர்ச்சையை அடைந்தார்கள். (ஸ 34)

——————————————————————————
*
(1) லக்ஷ்மணன் தன்னைவிட்டுப் பிரியான் என்று ராமனுக்குத் தெரியும். ஸீதைக்கு உபதேசம் பண்ணுகையில் பரதனையும் சத்ருக்கனையும் கூடப்பிறந்தவர்களைப்போலவும், பிள்ளைகளைப் போலவும் பார் என்று சொன்னான். அப்போது லக்ஷ்மணனையும் அவர்களுடன் சேர்க்க வில்லை. இப்போது லக்ஷ்மணனைத் தடுத்தது, ஒருவனால் வேண்டப் படாமல் ஒன்றையும் செய்யக்கூடாது என்கிற தர்மத்தை வெளியிடுவதற்காக.

(2) பரதன் ஸ்வபாவத்தை ராமன் நன்றாய் அறிந்தவன்; ஆன போதிலும் லக்ஷ்மணன் அபிப்ராயத்தை அறிவதற்காக, பரதன் கௌஸல்யையைக் கவனிக்கமாட்டான் என்று சொன்னது.

(3) லக்ஷ்மணன் தன்னைக் காட்டுக்கு அழைத்துக்கொண்டுபோக ராமனையும் ஸீதையையும் வேண்டினான். இதனால், எந்த ப்ரயோஜனத்திற்கும் பகவானையும் லக்ஷ்மியையும் வேண்ட வேண்டும் என்பது விளங்குகிறது. பிரபத்தியிலும் இப்படியே.

—————————————————————————–

வால்மீகி ராமாயண சாரம் 19

(42) இதைக்கேட்டு ஸீதை ப்ரீதியினாலே கோபம் கொண்டு என்னவார்த்தை சொல்லுகிறாய்? இதைக்கேட்டு எவனும் பரிஹாஸம் பண்ணுவானே. தாயோ, தகப்பனோ,உடன் பிறந்தவனோ, பிள்ளையோ, மருமகளோ, எல்லாரும் அவரவர்கள் செய்த கர்மங்களின் பலன்களை அநுபவிக்கிறார்கள். பார்யை ஒருத்தியே பர்த்தா செய்தவைகளின் பலன்களை அனுபவிக்கிறாள். ஆகையாலே, உன்னைக் காட்டுக்குப் போகச்சொன்னபோதே என்னையும் போகச்சொன்னதாகவே ஏற்படுகிறது. ஒரு ஸ்திரீக்குத் தகப்பனும், பிள்ளையும், தாயும், தோழியும் இங்கேயோ, மேல் உலகங்களிலோ கதியன்று. பர்த்தா ஒருவனே கதி. நீ இப்போதே காட்டுக்குப் போவதாயிருந்தால், நாணும் புல்லையும் முள்ளையும் மிதித்து வழியை நன்றாக்கிக் கொண்டு உன்முன்னாலே போவேன்.$$

_______________________
$$நாம் வந்த கார்யம் என்ன? ராவணனை சம்ஹாரம் பண்ணவேண்டியது அன்றோ? என்னை விட்டுவிட்டுப் போனால் அது எப்படி முடியும்? உனக்கு முன்னாலே நான் லங்கைக்குப் போகிறேன். அதை வியாஜமாக வைத்துக்கொண்டு,
நீ பின்னாலே வந்து தேவர்களின் கார்யத்தை முடித்து வை என்பது சீதையின் உட்கருத்து

__________________________________________

அப்படிப்போவதினால் உலகம் என்னைக் கொண்டாடும். அதினால் உனக்குப் பொறாமையுண்டாகுமோ? "நான் சொல்லுவதை இவள் கேட்கவில்லை " என்று கோபித்துக்கொள்ளாதே. இவள் எப்படிக் காட்டுக்கு வருவள் என்கிற ஸந்தேஹத்தை விட்டுவிட்டு என்னையும் அழைத்துக்கொண்டு போ. உன்னை விட்டுப்பிரிந்து ஸுகமாயிருக்கும்படி பாபத்தை நான் பண்ணவில்லை. பர்த்தாவுக்கு எந்த அவஸ்தை வந்தாலும், ஸ்திரீ அவனுடன் கூடவே இருந்து அவனுக்கு வேலை செய்யவேண்டியது. இது மாடிகளில் இருப்பதையும், விமாநங்களில் ஸஞ்சாரம் பண் ணுவ தையும், அணிமாமுதலான அஷ்டைச்வர்யங்களை அடைவதையும் காட்டிலுமுயர்ந்தது. நான் எப்படி இருக்கவேண்டியது என்பதை நீ உபதேசம் பண்ணவேண்டாம். இதை என் தாயாரும் என் தகப்பனாரும் ஏற்கனவே உபதேசம் செய்திருக்கிறார்கள். காடு நுழையமுடியாததாயிருந்தாலும், ஜனமில்லாததாயிருந்தாலும், புலி ஓநாய் முதலான பலவித மிருகங்கள் நிறைந்திருந்தாலும், அதற்குள் போவேன். மூன்று உலகங்களைக்கூட மதியாமலும் உன் சுச்ரூஷையையே நினைத்துக்கொண்டும் என் தகப்பனார் வீட்டிலேபோலே நான் காட்டில் ஸுகமாயிருப்பேன். நீ மற்றவர்களை ரக்ஷிக்கச்சக்தியுள்ளவன். என்னை ரக்ஷிப்பதில் என்ன ஸந்தேஹம்? உன்னுடன் கூடப்போக ஸித்தமாயிருக்கிற என்னை உன்னாலே திருப்பமுடியாது. உன்னுடன் கூட இருந்து உனக்குத் துக்கத்தை உண்டுபண்ணமாட்டேன் காட்டில் கிடைக்கக் கூடிய காய்களையும் கிழங்குகளையும் சாப்பிடுவேன். ரக்ஷிக்கிற உன்னுடன் கூடஇருந்து காட்டிலிருக்கிறவைகளைப் பார்க்க ஆசைப்படுகிறேன். உன்னுடன் இப்படிக் காட்டில் ஆயிரம் வருஷம் இருப்பேன். உன்னைவிட்டு ஸ்வர்க்கமும் எனக்குப்பிடிக்காது என்று சொன்னாள். (-27)

(43) ஸீதை இப்படிச்சொல்லியும், ராமன் காட்டிலுள்ள கஷ்டங்களை நினைத்து, அவளை அழைத்துக்கொண்டுபோக மனமில்லாதவனாய், அவைகளை விரிவாய்ச் சொன்னான் – "ஸிம்மங்களும், பெரிய மிருகங்களும், ஆறுகளில் செல்லும் முதலைகளும், மதம்பிடித்த யானைகளும், பலவிதப் பாம்புகளும், தேள்களும், புழுக்களும், கொசுக்களும் காட்டில் நிறைந்திருக்கின்றன. ஆறுகள் வளைந்து வளைந்து வழிகளைத் தடுக்கின்றன. கடுமையான காற்று அடிக்கும். வழிகள் கொடிகளாலும் முள்ளுகளாலும் மூடப்பட்டு நடக்க முடியாமல் இருக்கும். மரத்திலிருந்து தாமாய்விழும் பழங்களையே சாப்பிடவேண்டும். தானாய் பழுத்துக் கீழேவிழுந்த இலைகள்மேல் பூமியில் படுத்துக்கொள்ளவேண்டும். சக்திக்குத் தகுந்தபடி உபவாஸம் செய்யவேண்டும். ஒவ்வொரு நாளும் மூன்றுகாலம் ஸ்நாநம் பண்ணவேண்டும். இன்னும் பலதோஷங்கள் இருக்கின்றன." என்று (– 28). இதைக் கேட்டும் ஸீதையின் மனம் மாறவில்லை. அவள் ராமனைப் பார்த்து, ‘காட்டில் எந்த தோஷங்கள் இருப்பனவாகச் சொல்லுகிறாயோ அவைகள் எல்லாம் உன்னிடம் சேர்ந்திருக்கும் எனக்கு குணங்களாகவே தோன்றும். மிருகங்கள் எல்லாம் முன்பு பார்க்கப்படாத உன் ரூபத்தைப் பார்த்து ஓடிப்போய்விடும். உன்னுடன் கூடவே போகவேண்டும் என்று என் பெற்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். உன்னைவிட்டுப் பிரிந்தால் நான் பிராணனை விட வேண்டியதுதான். உன்கிட்ட இருக்கிற என்னைத் தேவர்களுக்கு ராஜாவான இந்திரனும் கண்ணாலே பாரான். பர்த்தாவைவிட்டுப் பிரிந்த ஸ்திரீ உயிரோடிருக்கமாட்டாள் என்று நீயே உபதேசம் செய்திருக்கிறாயே! நான் காட்டில் வஸிக்கவேண்டியவள் என்று தகப்பனார் வீட்டிலிருக்கும்போது பிராம்மணர்களும் துறவியான ஒரு ஸ்திரீயும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அது பொய்யாகுமோ? காட்டில் அநேக தோஷங்கள் இருப்பது உண்மைதான். மனது அடங்காதவர்களுக்கு அன்றோ அவைகள் தோஷங்கள்; ஆகையால் என்னைக் காட்டிற்குக் கூட அழைத்துக் கொண்டுபோ; இல்லாவிட்டால் விஷத்தைச் சாப்பிட்டாவது, நெருப்பில் விழுந்தாவது, ஜலத்தில் முழுகியாவது உயிரை விடுவேன்." என்று சொன்னாள்.(– 29)

(44) இப்படி ஸீதை சொல்லியும், ராமன் அவளைக் காட்டுக்கு அழைத்துக்கொண்டுபோக ஸம்மதிக்கவில்லை. ஸீதை கோபித்துக் கொண்டு அவனை நிந்தித்தாள் "என்னைவிட்டு நீ காட்டுக்குப் போவதை என் தகப்பனார் கேட்டால், அவர் என்ன எண்ணுவர்? உன் வேஷம் புருஷவேஷம், ஸ்வபாவம் ஸ்திரீ ஸ்வபாவம் என்று எண்ணமாட்டாரோ? ஸூரியனிடத்தில் போல ராமனிடத்தில் உயர்ந்த தேஜஸ் இருக்கிறது என்று ஜனங்கள் அறியாமல் சொல்லுகிறார்கள். உன்னையே கதியாக நம்பியிருக்கிற என்னை விட்டுவிட்டுப்போக எண்ணுகிறாயே. உனக்கு என்ன பயமுண்டாயிருக்கிறது. ஸத்யவான் வசத்தில் ஸாவித்திரி இருந்ததுபோல உன் வசத்திலிருப்பவளாக என்னை அறி. உன்னைத்தவிர வேறொருவனையும் மனதாலும் எண்ணினதில்லை. தன் ஸ்திரீயைக்கொண்டு பிழைக்கிறவன் போல என்னைப் பிறருக்குக் கொடுக்க இச்சிக்கிறாயோ?" என்று. இப்படிச் சொல்லி அழுதுகொண்டிருந்த ஸீதையைக் கட்டிக் கொண்டு ராமன் "உன்னைத் துக்கப்படச்செய்து ஸ்வர்க்கத்தையும் நான் வேண்டேன். எனக்கு ஒருவரிடத்திலிருந்தும் பயமில்லை. உன்னை ரக்ஷிக்க எனக்குச் சக்தியிருக்கிறது. ஆனால், உன் அபிப்பிராயத்தை அறியாமல் உன்னைக் காட்டுக்கு அழைத்துக் கொண்டு போகக்கூடாது என்று எண்ணினேன். என்னுடன் காட்டுக்குப்போவதற்காகவே நீ ஸ்ருஷ்டிக்கப்பட்டிருக்கிறாய். அதை நான் எப்படி மாற்றக்கூடும்? முன்னோர்களும் தங்கள் பார்யைகளைக் கூட அழைத்துப்போனார்கள். இந்தத் தர்மத்தை நானும் அனுஸரிக்கிறேன் என்று சொல்லி, "உன்னுடைய
ஸொத்துக்களையெல்லாம் முதலில் பிராமணர்களுக்கும், பிறகு பரிவாரங்களுக்கும் சீக்கிரம் கொடுத்துவிடு என்று கட்டளையிட்டான். ஸீதையும் ஸந்தோஷத்துடன் அதைச் செய்தாள்.* (
-30)

———————————-

** ராமன், ஸீதை தன்னைவிட்டுப் பிரிந்திருக்கமாட்டாள் என்பதை அறிந்தபோதிலும், அவளைக் கொண்டு பதிவ்ரதையானவள் தன் பர்த்தாவைவிட்டுப் பிரிந்திருக்க ஸம்மதிக்கமாட்டாள் என்பதையும், அவனுடன் ஸுகத்தை அனுபவித்ததுபோல் அவன் துக்கத்தையும் அவனுடன் கூட அனுபவிப்பவள் என்பதையும் உலகத்துக்கு வெளியிடவே அவள் அபிப்ராயம் தெரியாததுபோல் அவளைத் தடுத்தது.

___________________________

ஶ்ரீ வீ.கே. ஆர் ஸ்வாமியின் வால்மீகி ராமாயண சாரம் 18

(40) ராமன் காட்டுக்குப்போவதில் உறுதியுள்ளவனாயிருப்பதை அறிந்து, கௌஸல்யை "நீ துக்கத்தை அறியாதவன்; எல்லாரிடமும் பிரியமாகப்பேசுகிறவன்; என்னிடத்தில் தசரதனுக்குப் பிறந்தவன். நீ இறைந்து கிடக்கிற நெல்லைப்பொறுக்கிக் கொண்டு அதனாலே எப்படி ஜீவிப்பாய்? உன் வேலைக்காரர்கள் நல்ல அன்னத்தை சாப்பிடுகையில், நீ காயையும் கிழங்கையும் எப்படிச் சாப்பிடுவாய்? குணமுள்ளவனும் பிரியனுமான பிள்ளையை ராஜா காட்டுக்கு அனுப்பினான் என்பதைக்கேட்டு எவன் அதை நம்புவன்; நம்பினால் எவனுக்குப் பயமுண்டாகாது. தைவம் பலமுள்ளது. அதுதான் எல்லாருக்கும் ஸுகத்தையும் துக்கத்தையும் கொடுக்கிறது. உன்னை விட்டுப் பிரிந்த என்னைச் சோகாக்னி கொளுத்திவிடும். முன்னால் போகிற தன்கன்றை மாடு பின் தொடராதோ? குழந்தாய்! நீ எங்கேபோகிறாயோ, அங்கே நானும்வருகிறேன்.’ என்று சொன்னாள். ராமன் அதைத்தடுத்து, "ராஜா கைகேயினால் வஞ்சிக்கப்பட்டார். நான் காட்டுக்குப் போய் நீயும் அவரை விட்டால் அவர் உயிரோடிருக்கமாட்டார். ஸ்திரீகள் பர்த்தாவை விடுவது க்ரூரமானது; அது உன்னால் செய்யத்தகுந்ததன்று. அதை மனதால்கூட நினைக்கக்கூடாது. அவர் எதுவரையில் ஜீவிப்பாரோ, அதுவரையில் அவருக்கு சுச்ருஷை செய்யவேண்டியது. இது நிலையான தர்மம்." என்று கௌஸல்யையை ஸமாதானம் பண்ணினான். மறுபடியும் அவள் ராமனுடன் கூடவருவதாகச் சொல்ல, அவன் "பரதன் தர்மத்தில் மனம் வைத்தவன். எல்லாரிடத்திலும் பிரியமாகப் பேசுகிறவன். நீ சொன்னதைச்செய்வன். நான் காட்டுக்குப் போனபிறகு ராஜா என்னைப்பிரிந்த சோகத்தாலே எப்படிக் கஷ்டப்படமாட்டாரோ, அப்படி நீ கவனமாய்ச் செய்யவேண்டியது. ஒரு ஸ்திரீ மிகவும் நல்லவளாயும் வ்ரதத்திலும் உபவாஸத்திலும் பிரீதியுள்ளவளாயுமிருந்தும் பர்த்தாவுக்கு சுச்ரூஷை செய்யாவிட்டால், அவள் பாபத்தின் பலத்தையே அடைவள். தேவ பூஜையைச் செய்யாவிட்டாலும் பர்த்தாவின் சுச்ருஷையாலேயே ஸ்திரீ ஸ்வர்க்கத்தை அடைகிறாள். எனக்காக அக்னி கார்யங்களையும் புஷ்பங்களால் தேவதைகளின் பூஜையையும் செய்துகொண்டிரு.” என்று அவளுக்கு ஆறுதலைச்செய்தான். இதைக் கேட்டு கௌஸல்யை "நீ ஸுகமாகப்போய் திரும்பிவந்து என் துக்கத்தைப்போக்கு" என்று அனுமதி கொடுத்தாள். (-24)

(41) கௌஸல்யை "உன்னைத் தடுக்கமுடியவில்லையே. நீ போய் சீக்கிரம் திரும்பிவந்து அபிஷேகத்தைப் பண்ணிக்கொள். எந்த தர்மத்தை நீ பிரீதியுடனும் நியமத்துடனும் பரிபாலநம் பண்ணுகிறாயோ, அந்த தர்மம் உன்னை ரக்ஷிக்கட்டும். தைவங்களும் மஹர்ஷிகளும், விசுவாமித்ரர் கொடுத்த அஸ்த்ரங்களும் பித்ருசுச்ரூஷையும் மாத்ருசுச்ரூஷையும் ஸத்யமும் உன்னை ரக்ஷிக்கட்டும் " என்று சொல்லி, எவைகள் அவளுடைய நினைவுக்கு வந்தனவோ, அவைகளையெல்லாம் ராமனை ரக்ஷிக்கும்படி பிரார்த்தித்து, குருக்களுக்கும் பிராமணர்களுக்கும் தானங்களைச் செய்து, அவர்களைக் கொண்டு ஆசிர்வாதம் செய்வித்து,. ரக்ஷையைப்பண்ணிப் போக விடைகொடுத்தாள். ராமன் அவளை ப்ர தக்ஷிண நமஸ்காரம்பண்ணி ஸீதையின் க்ருஹத்துக்குப்போனான். (-25). ஸீதை அபிஷேகத்துக்கு உண்டான இடையூறை அறியாதவளாய் தேவ காரியங்களைச் செய்துவிட்டு ராமன் வருவதை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் முகம் வாடி வெட்கத்தினால் கொஞ்சம் தலை குனிந்து வருவதைப்பார்த்து, ஸீதை அதற்குக் காரணத்தைக் கேட்டாள். ராமன், ஸீதாய்! என் தகப்பனார் என்னைக் காட்டுக்கு அனுப்புகிறார் என்பதையும், கைகேயி முன்னால் வரங்களைக் கேட்டிருந்ததையும், அவைகளைக்கொண்டு அவள் கேட்டுக்கொண்டபடி தான் காட்டுக்குப் போவதையும், பரதனுக்கு அபிஷேகம் பண்ணுவதையும், சொன்ன சொல்லைத் தவிறாத தகப்பனாராலே தான் காட்டுக்குப் போக நியமிக்கப்பட்டதையும் சொல்லி, அவளுக்கு ஹிதத்தை உபதேசித்தான்:- ‘பரதனிடத்தில் என்னைப்பற்றி ச்லாகிக்காதே. ஸமிருத்தியுள்ள புருஷர்கள் மற்றவர்களைப்பற்றிய ஸ்தோத்ரத்தை ஸஹியார்கள். அவனிடத்தில் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக ஒன்றையும் தேடக்கூடாது. அவனுக்கு அநுகூலமாக இருக்கவேண்டியது. அவனுக்குத் தகப்பனார் ராஜ்யத்தைக் கொடுத்திருக்கிறார். அவன் யுவராஜாவாக இருக்கப் போகிறபடியால் அவனுக்கு ப்ரஸாதமுண்டாகும்படி இருக்கவேண்டியது. இப்போதே நான் காட்டுக்குப் போகிறேன். என்னிடத்தில் ஸ்திரமான அனுராகமுள்ளவளாய் இரு. நீ வ்ரதங்களையும் உபவாஸங்களையும் செய்துகொண்டிருக்கவேண்டியது. காலையில் எழுந்திருந்து தேவபூஜையைச் செய்துவிட்டு, என் தகப்பனாருக்கு நமஸ்காரம் செய். என் தாயார் கௌஸல்யை வயதுசென்றவள். என் பிரிவாலே துக்கப்பட்டுக்கொண்டிருப்பவள். தர்மத்தை முன்னிட்டு அவளிடத்தில் வெகுமானம் பண்ணு. என் மற்ற தாயார்களுக்கும் நமஸ்காரம் செய். எல்லாரும் என்னிடத்தில் பிரீதியுள்ளவர்களாயும் ஸ்நேஹமுள்ளவர் களாயும் என்னை வளர்த்தவர்களாயுமிருக்கிறார்கள். பரதசத்ருக்னர்களை உடன்பிறந்தவர்களாகவும் பிள்ளைகளாகவும் எண்ணு. அவர்கள் எனக்கு ப்ராணனைக் காட்டிலும் பிரியமானவர்கள். பரதனுக்கு ஒருபோதும் அப்ரியமானதைச் செய்யாதே. அவன் நம்முடைய தேசத்துக்கு ராஜா; குலத்துக்கும் ப்ரபு. ராஜாக்கள், நன்றாய் ஆராதநம் பண்ணினால் ஸந்தோஷமும், அப்ரியத்தைச் செய்தால் கோபமும் அடைவர்கள். அப்ரியமாக நடந்தால் வயிற்றில் பிறந்த பிள்ளைகளையும் விட்டுவிடுவர்கள். பிரியமாக நடந்தால் பந்துக்கள் அல்லாதவர்களையும் சேர்த்துக் கொள்ளுவார்கள். நீ இங்கிருந்து நான் சொன்னதைச் செய்யவேண்டியது என்று. (-26)

ஶ்ரீ வால்மீகி ராமாயண சாரம் 17

(38) மிகுந்த கோபம் கொண்டிருந்த லக்ஷ்மணனைப் பார்த்து ராமன், கோபத்தையும், சோகத்தையும் அடக்கிக் கொண்டு தைரியத்தையே கைப்பிடித்து, இந்த அவமானத்தைத் தள்ளிவிட்டு மிகுந்த ஸந்தோஷமுள்ளவனாயிரு. என் அபிஷேகத்துக்காக சேகரிக்கப் பட்டதெல்லாவற்றையும் விட்டுவிடு. எனக்கு வேண்டியதைச்செய். என் அபிஷேகத்துக்காகப் பதார்த்தங்களைச் சேகரிப்பதில் உனக்கு உண்டாயிருந்த பரபரப்பை நான் காட்டுக்குப்போவதில் உபயோகப்படுத்து. எந்த கைகேயிக்கு என் அபிஷேகத்தைக் கேட்டு மனதில் தாபமுண்டாயிற்றோ, அந்தக்கைகேயிக்கு இன்னும் ஸந்தேஹமுண்டாகாதபடி செய். அவளுக்கு ஸம்சயமும் அதனால் துக்கமும் உண்டாவதை ஒரு முஹுர்த்தமும் என்னால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. தாயார்களுக்காவது தகப்பனாருக்காவது அறிந்தோ அறியாமலோ  பிரியமில்லாததைச் சிறிதும் நான் செய்ததாக எனக்கு நினைவில்லை. தகப்பனார் உண்மையைப் பேசுகிறவர்; ப்ரதிஜ்ஞை பண்ணினதை நிறைவேற்றுகிறவர்; பரலோகம் கிடைக்காமல் போகுமோ என்று பயப்படுகிறவர். அவருக்கு அந்தப் பயமில்லாமலிருக்கட்டும். அபிஷேக விஷயமான ஏற்பாடுகளை நிறுத்தா விட்டால் நான் சொன்னது பொய்யாய்விட்டதேஎன்று அவருக்குத் தாபமுண்டாகும். எனக்குத் தாபத்தை அது உண்டுபண்ணும். நான் காட்டுக்குப்போனபிறகு, கைகேயி, தான் செய்யவேண்டியதைச் செய்துவிட்டதாய் எண்ணி ஸந்தோஷப் பட்டு, தன்பிள்ளை பரதனுக்குக் கவலையின்றி அபிஷேகம் செய்வள். அவள் மனதும் ஸுகம் அடையும். நான் காட்டுக்குப்போவதற்கும், கையில் வந்த ராஜ்யத்தை இழப்பதற்கும் தைவமே காரணம். அவளுக்கு என்னைப் பீடிக்க வேணும் என்கிற எண்ணம் தானாக உண்டாகுமோ? அது அவளுக்கு தைவத்தால் உண்டு பண்ணப்பட்டது. நான் தாயார்களிடத்தில் எப்படி பேத புத்தி பண்ணவில்லையோ, அப்படியே கைகேயியும் தன் பிள்ளையிடத்திலும் என்னிடத்திலும் பேதபுத்தியைப் பண்ணவில்லையே? அவள் நல்ல ஸ்வபாவமுள்ளவள். ராஜாவின் பெண். நல்ல குணமுள்ளவள் என்று பிரஸித்தி பெற்றவள். பர்த்தாவின் முன்னிலையில் ஸாதாரண ஜனத்தைப்போல எனக்குப் பீடையுண்டு பண்ணுவதைக் கேட்பளோ? தைவத்தின் பிரபாவத்தை இன்னது  என்று அறியமுடியாது. ஒருவனும் அதை மீற முடியாது. இந்த விஷயம் என்னிடத்திலும் அவளிடத்திலும் நன்றாய்த்தெரிகிறதே. என் கையில் வந்த ராஜ்யம் போய்விட்டது. அவளுக்கு ஒருபோதுமில்லாத புத்தி உண்டாயிருக்கிறது. எவனால் தைவத்தை எதிர்க்கமுடியும்? உலகத்தில் ஸுகமும் துக்கமும், பயமும் கோபமும், லாபமும் நஷ்டமும், பிறப்பும் இறப்பும், இவ்விதமான மற்றவைகளும் தைவத்தின் செயல்களே. உக்ரமான தபஸ் செய்கிற ருஷிகளும் தைவத்தால் பீடிக்கப்பட்டவர்களாய் நியமங்களை விட்டுவிட்டுக் காமத்துக்கும் கோபத்துக்கும் வசப்பட்டு ருஷித்தன்மையை இழக்கிறார்கள். முன்னதாக எண்ணப்படாமலும் காலநியமமில்லாமலும் எது உண்டாகிறதோ, அது தைவத்தின் வேலை. இந்த நல்ல எண்ணத்தாலே மனதை அடக்கிக்கொண்டு என் அபிஷேகம் நின்றுபோனதைக் குறித்து வருத்தப்படாதே." என்று ஸமாதானம் பண்ணினான். (ஸ-22)

(39) ராமன், எல்லாம் தைவச்செயல், என்று சொன்னதைக்கேட்டு, லக்ஷ்மணன் கோபித்துக்கொண்டு, தகப்பனார் சொன்னதைச்செய்யாவிட்டால் தோஷம் உண்டாகும் என்றும், உலகத்தாரும் தன்னைப்பார்த்து இந்தத் தர்மத்தை விட்டுவிடுவர்கள் என்றும் எண்ணி, காட்டுக்குப்போக அவஸரப்படுகிறாய். இது தகுந்ததன்று. உன்னைப் போன்றவன் இதைச்சொல்லக் கூடாது. சக்தியில்லாத க்ஷத்ரிய அதமன் அன்றோ தைவத்தை அநுஸரிக்கவேண்டியது? நீயோ ஸமர்த்தன்; க்ஷத்ரிய ச்ரேஷ்டன்; தைவத்தையும் தள்ளிவிடச் சக்தன். தைவத்தை ஏன் ஸ்தோத்ரம் பண்ணுகிறாய்? அது சக்தியில்லாதது; எளியது. சக்தியுள்ளதாயிருந்து ஒரு வேலையைச்செய்தால் அன்றோ அந்த வேலையினாலே அது இருக்கிறது என்று அநுமானம் பண்ணலாம். தகப்பனின் வார்த்தையை கேட்காதிருப்பது தோஷம் என்று எண்ணுகிறாயே, அவரும் அவர் பாரியையான கைகேயியும் பாபிகள் அல்லவா? அவர்கள் சொன்னதைக்கேளாமை தோஷம் என்று எப்படி உனக்கு ஸம்சயமுண்டாகிறது? உலகத்தில் ஸமர்த்தர்கள் தர்மம் என்கிற வியாஜத்தைக்கொண்டு தங்களுடைய தோஷங்களை மறைத்துக் கொள்ளுகிறார்கள். தசரதனும் கைகேயியும் இப்படிப்பட்டவர்கள். தங்கள் ஸ்வபாவங்களை மறைத்துக்கொண்டு உனக்கு அப்ரியத்தைச் செய்கிறவர்கள். உன் அபிஷேகம் நடக்காதிருப்பதற்கு நல்ல கார்யம் செய்துவிட்டார்கள். இது ஏன் உனக்குத் தெரியவில்லை.இப்படியே இருவரும் யோசனை செய்திருக்கிறார்கள். பரதனுக்கு ராஜ்யத்தைக் கொடுக்கவேண்டும். மூத்த பிள்ளையாகிய இங்கே இருக்கையில் அது முடியாது. அதற்காக உன்னைக் காட்டுக்கு அனுப்ப வேண்டும். அதற்கு ஓர் வியாஜம் வேண்டும். அந்த வியாஜம், ராஜா கைகேயிக்கு முன்னால் இரண்டு வரங்கள் கொடுத்தது என்பதும், அவைகளை இப்போது கைகேயி கேட்டாள் என்பதுமாம். இப்படியில்லாவிட்டால், இவைகளை அவள் முன்னாலேயே கேட்டிருக்கமாட்டாளோ? அவர்தாம் கொடுத்திருக்கமாட்டாரோ? உன்னைத்தவிர, வேறொருத்தனுக்கு அபிஷேகம் பண்ணுவதை உலகத்தார் நிந்திப்பார்கள். அந்த அபிஷேகத்தை நான் பொறுத்திருக்கமுடியாது. இந்த விஷயத்தில் என்னை க்ஷமிக்கவேண்டும். ‘எப்படியிருந்தாலும் தகப்பனார் வார்த்தைப்படி நடக்கவேண்டாமா? அது தர்மம் அன்றோ என்று கேட்கிறாயோ? அதை நான் தர்மமாக எண்ணவில்லை. அதை தர்மமாக எண்ணி ப்ரமிக்கிறாய். ராஜா கைகேயி வசத்திலிருக்கிறார். அவர் சொல்லுவது மிகவும் அதர்மம். அதை எப்படிச் செய்ய இச்சிக்கிறாய்? அதைத்தடுப்பதற்கு உனக்குப் பௌருஷ மிருக்கிறதே. எவன் தன்னுடைய பௌருஷத்தாலே தைவத்தைத் தடுக்கச் சக்தனோ, அவனுடைய காரியத்தைத் தைவம் கெடுக்கிறதில்லை. அவனும் துக்கப்படுகிறதில்லை. இப்போது தைவத்தின் பலத்தையும் மனிதனின் பலத்தையும் எல்லாரும்
பார்க்கப்போகிறார்கள். தைவத்தால் ஏற்பட்டதாக நீ எண்ணுகிற இடையூறைப் போக்கி நான் உனக்கு அபிஷேகத்தைப் பண்ணிவைக்கிறேன். இதை லோகபாலர்களே தடுக்கமுடியாதே. தகப்பனார் எவ்வளவு? எவர்கள் உன்னைக் காட்டுக்கு அனுப்ப ஏற்பாடு செய்தார்களோ, அவர்களே அந்தக் காட்டில் பதினான்கு வருஷம் இருக்கும்படிச் செய்கிறேன். ராஜாக்கள் காட்டுக்குப் போவது உண்டு. அநேகமாயிரம் வருஷம் ராஜ்ய பரிபாலனம் பண்ணி, பிள்ளைகளிடத்தில் அதை ஒப்பிவித்தபிறகு வநவாஸம் செய்யப்படுகிறது. ராஜா சலசித்தனாயிருப்பதாலே ராஜ்யம் போய்விடுமோ’ என்று எண்ணி அது வேண்டாம் என்று சொல்லுகிறாயோ? உன்னுடைய ராஜ்யத்தை நான் ரக்ஷிக்கிறேன். இப்படியே ப்ரதிஜ்ஞை பண்ணுகிறேன். இந்த என் இரண்டு புஜங்கள் அழகுக்காக அல்ல ; தனுஸு ஆபரணத்துக்காக அன்று ; கத்தி அழகாக இடுப்பில் கட்டிக்கொள்வதற்காக அன்று; பாணங்கள் தூணியிலிருப்பதற்காக அல்ல; இவைகள் எல்லாம் விரோதிகளை அடக்குவதற்காக ஏற்பட்டவைகள்." என்று சொன்னான்.** ராமன், “தகப்பன் வசநப்படி நடக்கையில் உறுதியுள்ளவனாயிருக்கிறவன் என் று என்னை அறி. நல்ல வழியில் நில்லு.” என்று பலதடவை லக்ஷ்மணனை ஸமாதானம் பண்ணினான். (ஸ-23)

** லக்ஷ்மணன் தர்மத்தை அறிந்தவன். ஆனபோதிலும், ராமனிடத்தில் மிகுந்த ஸ்நேகத்தால் அதை மறந்து இப்படிப் பேசினது.

ஶ்ரீமத் வால்மீகி ராமாயண சாரம் 16

37) லக்ஷ்மணன் சொன்னதைக் கேட்டு, கௌஸல்யை ராமனைப் பார்த்து "குழந்தாய்! உன் தம்பி லக்ஷ்மணன் வார்த்தையைக் கேட்டாயோ? அவன் சொன்னது உனக்கு இஷ்டமானால் மேலே செய்யவேண்டியதைச் செய். என் ஸபத்னியின் வார்த்தையைக் கேட்டு துக்கத்தாலே தபிக்கிற என்னை விட்டுவிட்டுப் போவது உனக்குத் தகுந்ததன்று. நீ தர்மத்தை அறிந்து தர்மத்தைச்செய்ய இச்சித்தால், இங்கேயிருந்து எனக்கு சுச்ருஷை செய். இது உயர்ந்த தர்மம். காச்யபன் தன் வீட்டிலேயே இருந்து தாயாருக்கு சுச்ருஷை செய்து அந்த தபஸாலே ஸ்வர்க்கத்தை அடைந்தான். எப்படி உன் தகப்பனாரைக் கௌரவத்துடன் பூஜிக்கவேண்டியதோ, அப்படியே நீ என்னையும் பூஜிக்க வேண்டியது. நான் உனக்கு அனுமதி கொடுக்கமாட்டேன். நீ இங்கிருந்து காட்டுக்குப் போகக்கூடாது. உன்னைவிட்டுப் பிரிந்த எனக்கு ஸுகமும் உயிர்வாழ்க்கையும் எதற்கு? நீ இங்கிருக்கும் போது நான் புல்லைச் சாப்பிடுவதுகூட நல்லது. துக்கப்பட்டுக்கொண்டிருக்கிற என்னை விட்டுவிட்டு நீ போனால், நான் ப்ராயோபவேசம் பண்ணுவேன். பிழைத்திருக்க என்னாலே முடியாது.’ என்று சொன்னாள். ராமன் அவளுக்குப் பதில் சொன்னதாவது :-"தகப்பனார் வார்த்தையை மீறுவதற்கு எனக்குச் சக்தியில்லை. உன்னைத் தலையால் வணங்கி நல்ல வார்த்தை சொல்லுகிறேன். நான் காட்டுக்குப் போக விரும்புகிறேன். கண்டு என்கிற ருஷி தர்மத்தை அறிந்தவனாயிருந்தாலும் தகப்பன் வாக்யத்தைச் செய்வதற்காகப் பசுவைக் கொன்றான். நம்முடைய குலத்திலும் தகப்பனான ஸகரன் சொன்னபடி நடக்க அவன் பிள்ளைகள் பூமியைக் கல்லி மரணத்தை அடைந்தார்கள். பரசுராமனும் தகப்பன் சொன்னபடி தாயாரான ரேணுகையைக் கோடரியினால் கொன்றான். இவர்களாலும் தேவர்களைப்போன்ற மற்றவர்களாலும் தகப்பனார்கள் சொன்னவைகள் செய்யப்பட்டன. நானும் தகப்பன் வார்த்தையைக் கஷ்டமின்றிச் செய்வேன். அது அவருக்கு ஹிதம்." என்று சொல்லி, பிறகு லக்ஷ்மணனைப் பார்த்து "லக்ஷ்மணா! உனக்கு என்னிடத்திலிருக்கிற மிகுந்த ஸ்நேஹமும் உன் பலமும் பராக்ர மும் ஒருவனும் கிட்ட முடியாதபடியுள்ள உன் தேஜஸும் எனக்குத் தெரிந்தவைகளே. தர்மத்தினுடையவும் ஸத்யத்தினுடையவும் சாந்தியினுடையவும் ரஹஸ்யத்தை அறியாமல், தாயார் மிகவும் வருத்தப்படுகிறாள். அதை அறிந்த நீயும் ஏன் இப்படிப் பேசுகிறாய்? உலகத்தில் தர்மம் மிகவுமுயர்ந்தது. தர்மத்தில் ஸத்யம் நிலைத்திருக்கிறது. தாயார் வார்த்தையைக் காட்டிலும் தகப்பனார் வார்த்தை உயர்ந்தது. அதன்படி நடப்பதாலே தர்ம பலம் கிடைக்கும். தர்மத்தைக் கைக்கொண்டவன், தகப்பன் தாயார் பிராமணன் ஆகிய இவர்களுக்குச் சொன்னதைச் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, பிறகு அதைப் பொய்யாகப் பண்ணக்கூடாது. ஆகையால், தகப்பனார் கட்டளையை மீற எனக்கு உரிமை இல்லை. அவருடைய வார்த்தையைக் கொண்டுதான் கைகேயி கட்டளையிட்டாள். க்ஷத்ரிய தர்மத்தை அநுஸரித்து உனக்கு இந்தக் கெட்ட எண்ணம் உண்டாயிருக்கிறது. அதை விட்டுவிடு. தர்மத்தை ஆச்ரயி. கொடுமையைக் கைவிடு. என் புத்தியை அநுஸரித்து நட என்று சொன்னான். இப்படிச் சொல்லி, மறுபடியும் கௌஸல்யையைப் பார்த்து, "இங்கிருந்து காட்டுக்குப்போகிற எனக்கு அம்மா! விடைகொடு என் பிராணன்மேல் ஆணையிடுகிறேன். எனக்கு மங்கள காரியங்களைச் செய். பிரதிஜ்ஞையை நிறைவேற்றிவிட்டு, காட்டிலிருந்து திரும்பி வருவேன். சோகத்தை அடக்கிக்கொள். வருத்தப்படாதே. என்னைப்போலவே நீயும் ஸீதையும் லக்ஷ்மணனும் ஸுமித்திரையும் ராஜாவின் கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள். இது எப்போதும் அநுஷ்டிக்கப்பட்டு வரும் தர்மம். நான் காட்டுக்குப்போவதாகத் தீர்மானம் பண்ணியிருக்கிறேன். அதை நீயும் அநுமதிக்கவேண்டியது." என்று சொல்லி, அதையே மறுபடியும் உறுதிப்படுத்தி, காட்டுக்குப்போகத் தாயாரை ப்ரதக்ஷிணம் பண்ணினான். (21)