எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 18


||ஸ்ரீ:||

ஸ்ரீமதித்யாதி சதுர்வேத சதக்ரது

நரஸிம்ஹ தாதயார்ய மஹாதேசிகன்

(நாவல்பாக்கம் ஸ்வாமி)

            இம்மஹான், ஞானானுஷ்டானங்களை குலதனமாக உடைய ‘சதுர்வேத சதுக்ரது’ குமார தாதயார்ய வம்சத்தில் ஸ்ரீ வெங்கடரங்காசார்ய ஸ்வாமிக்கு குமாரராக அவதரித்தவர். இவருக்கு ‘நாவல்பாக்கம் ஸ்வாமி’ என்று ப்ரஸித்தி. ‘வித்வான் நரசிம்மாசார்ய ஸ்வாமி’ என்று வ்யவஹாரம். பரம்பரையாக வித்வான்கள் இவர் முன்னோர்கள்.

            வித்யாப்யாஸம்:–  தம் மாதுலர் புரிசை நடாதூர் ஸ்ரீரங்காசார் ஸ்வாமியினிடம் இவருக்கு வேதாப்யாஸம். மைசூர் ஸம்ஸ்க்ருத கலாசாலையின் அத்யக்ஷகர் கஸ்தூரி ரங்காசார்ய ஸ்வாமியிடம் தர்க்க சாஸ்த்ரப் பயிற்சி. திருவிசநல்லூர் ராமசுப்பா சாஸ்த்ரிகளிடம் மீமாம்ஸா க்ரஹணம். ஸ்ரீபரமஹம்ஸேத்யாதி நாவல்பாக்கம் வேதாந்த ராமாநுஜ மஹா தேசிகனிடம் வேதாந்த சாஸ்த்ரோபதேசம்.

            உத்தமத்தில் தேர்ச்சி:-  தர்க்க சாஸ்த்ரம் பயின்றது ஏழு வருஷம். ஒவ்வொரு பரீக்ஷையிலும் தவறாமல் உத்தமத்திலேயே தேர்ச்சி. இதை ஸஹிக்காத வித்வான் ஒருவர் வேண்டுமென்றே ஓர் பரீக்ஷையில் நம்பரைக் குறைத்துப்போட்டு மத்யமத்தில் தேறும்படி செய்தார். தர்க்காசார்யரான கஸ்தூரி ரங்காசார்யருக்கு இது தெரிந்தது. இதில் ஏதோ சூது நடந்திருக்க வேண்டுமென்று எண்ணினார். அரண்மனைக்கு எழுதினார். மறுபடியும் இம்மஹானுக்கு மட்டும் பரீக்ஷை வைக்கச் செய்தார். த்ரிமதஸ்தர்களைக் கொண்டு தனித்தனியாக நம்பர் (மார்க்) போடவும் வைத்தார். எல்லாவற்றிலும் உத்தமோத்தமத்திலேயே நம்பர் வந்திருந்தது. இதைக் கண்ட எல்லோரும் வியந்தனர். கடைசி பரீக்ஷைக்குப் பிறகு ‘தர்க்க வித்வா’னென்று பிருதமளிக்கப் பட்டது. ஜோடு சால்வை முதலானது ராஜ ஸம்மானமாக வழங்கப் பட்டது. இதுபோலவே பல சமஸ்தானங்களில் பரீக்ஷை கொடுத்துத் தேறினார்.

            வாதத்தில் வெற்றி:– பல ஸதஸ்ஸுகளில் வாதம் புரிந்தார். மன்னார்குடி ஸதஸ்ஸில் உத்தர தேசத்து தர்க்க வித்வானொருவர் சபை முடியுந் தருணத்தில் வந்து, ‘என்னோடு வாதம் புரியுந் திறமையுள்ளவர் வாதிக்கலா’மென்று வம்புக்கிழுத்தார். அதற்கு சற்று முன்புதான் இச்சுவாமி ஸம்பாவனை பெற்று தம்மூருக்குத் திரும்பும் உத்தேசத்தில் ஹரித்ரா நதி சமீபத்தில் சென்று கொண்டிருந்தார். ஸதஸ்ஸிலுள்ள பல ப்ராசீன ப்ரஸித்த பண்டிதர்களும் ஒரே அபிப்ராயமாக ‘நாவல்பாக்கத்துப் பிள்ளையாண்டான் தான் இவனை அடக்க முடியும்’ என்று நிச்சயித்து இவரை அழைத்துவரச் செய்தனர். வாதம் செய்யவும் தூண்டினர். அதற்கிணங்கி வாதம் புரிந்தவர் ஸ்வாமி. வாதி சொன்னதிற்கு மேல் மூன்று ஆக்ஷேபங்களை நிறுத்தினார். வெற்றியையுங் கண்டார். இதுபோலவே கொச்சி ராஜாவை கேள்வியினாலேயே மடக்கி வெற்றி வாகையும் சூடினார் இச் சுவாமி.

            அனுஷ்டானம் :–  ஸந்த்யோபாஸனத்தை காலத்தில் செய்வதில் மிகவும் பிடிவாத முள்ளவர். சில சமயங்களில் ;ஸந்த்யா காலத்தில் தூங்கிவிடப் போகிறோமே’ என்று அஞ்சி, கண்விழித்த சமயம் பின்மாலை 3 மணியாகயிருந்தாலும் அப்பொழுதே குளத்திற்கு நீராட்டத்துக்காக எழுந்தருளுவதுமுண்டு. அனுஷ்டானத்திற்காக அங்கு சந்த்யா காலத்தை ப்ரதீக்ஷித்துக் கொண்டிருக்க நேரும்.

            வைராக்யம்:–  உபகரிப்பாரிருந்தும் தேவைக்குமேல் ப்ரதிக்ரஹிப்பது இல்லை. சாஸ்த்ரீய ரீதியில் விருத்தியை நடத்தும் விரதங் கொண்டார் ஸ்வாமி. சக்தி உள்ளவளவும் உஞ்ச விருத்தியை விரதமாகக் கொண்டிருந்தார். அசக்தி வந்த பிறகும் தமக்கு உகந்த இடத்தில்தான் ப்ரதிக்ரஹித்து வந்தார். மற்ற இடத்தில் ஸ்வர்ணத்தையும் த்ருணீகரிப்பவர். கிருகஸ்தராயிருந்தும் துறவி போன்று ப்ரகாசித்தவர்.

            ஆடம்பரமற்ற வாழ்க்கை:–  படாடோபத்தை அடியோடு வெறுத்தவர். இதற்குச் சான்று – பெரிய விருத்தத்தில் அமைந்த தனியனை வெறுத்து சின்ன விருத்தத்தில் (அநுஷ்டுப்பில்) அமைந்த தனியனை அங்கீகரித்ததுவொன்றே அமையும். பரஸமர்ப்பண அனுஷ்டானத்திற்காக ஸந்நிதிக்கு எழுந்தருளுங் காலத்தில்கூட, தமக்கு ஓர் மஹத்வம் தோன்றும்படி சிஷ்யபரிஜனங்கள் சூழ்ந்து வருவதை கண்டிப்புடன் நிராகரிப்பவர்.

          அர்ச்சையிலீடுபாடு:– பேரருளாளனிடம் அதிக ஈடுபாடு. ‘மற்றொரு தெய்வந் தொழானவனையல்லால்’ என்ற ரீதியில் இருந்ததென்றால் மிகையாகாது. அதன்பலனாக, தம் கிருஹத்தில் தமக்கு ஆராத்யனாக பேரருளாளனையே ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் ஏற எழுந்தருளப்பண்ணி அர்ச்சையில் ஆராதித்து வந்தார்.

            பகவத் ஸந்நிதியில் தீவட்டி கைங்கர்யம்:– நவராத்திரி முதலான உத்ஸவங்களில் வெளித் திருமுற்றத்தில் திவ்ய தம்பதிகள் பற்றி உலாவும் சமயம், கண்ணீர் மல்க ஆனந்த பரிதராய் தீவட்டி பிடிக்குங் கைங்கர்யத்தையே தாமேற்றுக் கொண்டு போர உகந்து வந்தார் ஸ்வாமி. இதனால் பகவத் கைங்கர்யத்தில் ஏற்றத் தாழ்வு கிடையாது என்பதை அனுஷ்டித்துக் காட்டினபடி.

            ஆசார்ய ஸேவையின் ப்ரதான்யம்:– நவராத்திரி உத்ஸவமும் தேசிகனுத்ஸவமும் சேர்ந்துவரும் சமயத்தில் பெருமாள் கைங்கர்யத்தைப் புறக்கணித்து இருவேளையிலும் தேசிகன் கைங்கர்யத்தி லீடுபட்டிருப்பார் ஸ்வாமி. தேசிகன் சாற்று மறையன்று பெருமாளும் தேசிகனும் மலையிலிருந்து கீழிறங்கும்போதும், சந்நிதிப்ரதக்ஷிணத்தில் எழுந்தருளும் போதும் பெருமாளை விட்டு தேசிகனுக்கே பரிஜனமாய் நின்று திருவாலவட்டம் சமர்ப்பிப்பது போன்ற கைங்கர்யங்களைச் செய்து உகந்து வந்தார்.

            அதிதி பூஜையில் பரிவு:– அதிதி கிடைத்துவிட்டால் தீர்த்த பானமாவது பண்ணாமல் போக விடுவதில்லை. ‘ந கஞ்சன வஸதள ப்ரத்யாசக்ஷீதய’ ‘அக்னிரி வ ஜ்வலன் அதிதி ரப் யாகச்சதி’ என்பது போன்ற பிரமாணங்களைக் காட்டி ஆதித்யத்தை ஸ்வீகரிக்கச் செய்வார் ஸ்வாமி.

            அத்யயனம் பண்ணினவர்களிடம் விசேஷாபிமானம்:– வேத ஸம்பன்னர்களைக் கண்டால் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி. ஏதேனும் ஸ்வல்பமாவது ஸ்வீகரிக்கச் செய்தாலல்லது ஸ்வரூபந்தரியார். ‘யம் யம் க்ரது மதீதே தேந தேநாஸ்யேஷ்டம் பவதி’ (யாகத்தை போதிக்கும் வேத பாகத்தை அத்யயனம் பண்ணின மாத்ரத்தாலேயே யாக பலன் உண்டாகிறது.) என்பவை போன்ற வேத வாக்யங்களை உதாஹரித்து கேழ்ப்போரை பரவசமடையச் செய்வது இயல்பாக அமைந்திருந்தது இவரிடம்.

            மனம் நோக நினைக்கார்:– பாகவதர்களின் மனம் புண்பட நினையார். புத்திக்குப் போக்குவீடாக சம்ப்ரதாய விஷயமாய் தாம் எழுதின சிறு நூலை, தாமே கொண்டுபோய் குளத்தில் தீர்த்தத்தில் சேர்த்துவிட்ட நிகழ்ச்சியே இதற்குச் சான்று.

            சிறந்த குணங்கள்:– தன் கார்யத்தைத் தானே செய்வது. மனதில் நல்லதென்று, சரியென்று தோன்றியதை தைரியமாயுரைப்பது போன்ற சிறந்த குணங்கள் நிரம்பியுள்ளவர் ஸ்வாமி.

            ஸஞ்சாரம்:– கடலாடி மலையேறி கங்கா ஸ்நானம் பண்ணியவர்.

            உபதேசம்:– “காலத்தில் முழுகித் துதி. காரியங்களைச் செய். பாகவதரை வெறுக்காதே. தினமும் பாஷ்யாதியை வாசித்துவா. அன்னத்தை எறியாதே. தளிகை சரியில்லை என்று அன்னத்தை நிந்திக்காதே. அந்நத்தை நிரஸ்கரிக்காதே. பஹுமானித்துவா. பக்வமான அன்னத்தையே பகவானுக்கு நிவேதனம் செய். தளிகை ஆகாத அன்னம் ருத்ரனுக்குச் சேரும். காந்தல் நிருருதி தேவதைக்கு. ஆகையால் பக்வமானதையே சமர்ப்பி. எப்போதும் த்வயத்தை அனுசந்தித்து உஜ்ஜீவியுங்கோள்” என்று உபதேசித்து வந்தார்.

            உபகாரம்:– ஸமாச்ரயணம், பரஸமர்ப்பணம், சாஸ்த்ர, வேத,வேதாந்தப் ப்ரவசனங்கள் இவர் செய்த உபகாரங்கள்.

            தனிச் சிறப்பு;– ப்ரமுகர்களும் வித்வான்களுமாக பல சிஷ்யர்கள் ஸ்வாமிக்கு. சில வித்வான்கள் புதுக்கோட்டை ஸமஸ்தானம் முதலியதில் பரீக்ஷை அதிகாரிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். ஆசார்யகம் வஹிக்கிறார்கள். இப் பெருமைகளும் ஸ்வாமிக்கிருக்கும் தனிச் சிறப்பு.

            ஸ்வாமி ஸ்ரீபாஷ்யத்தில் ஆங்காங்கு அற்புதமான விஷயங்களை விமர்சித்துப் பல வாதங்களை அருளிச் செய்திருக்கிறார்.

அவையாவன:–
1. பராப்யுபகத பஹ்வர்த்தவிசார:
2. ஸ்வமதாரோபித தோஷோத்கார:
3. கதிபயாதிகரணார்த்த விசார:
4. (க்வசித் க்வசித்) பாஷ்ய வ்யாக்யாநம்
5. கதிபய ச்ருத்யர்த்த விசார:
6. ஸத்வித்யா வ்யாக்யா
7. ஆனந்தவல்லீ வ்யாக்யா
8. கடசதுர்த்தவல்லீ வ்யாக்யா
9. ப்ராசீந பாஷ்ய பாட நிர்வாஹ:
10. நிஷ்ட்டா ஸ்வரூபாதி நிரூபணம்
11. கதிபயப்ரமேய ஸ்வரூப நிரூபணம்
12. அதிகரண ஸாராவளீ தத்வ்யாக்யா பராமர்ச:
முதலியன.

            ஸ்ரீபாஷ்யத்தில் ஒரு அதிகரணத்தை ஸேவித்தால் அனேக க்ருச்ர பலமுண்டு என்று அடிக்கடி ஸாதிப்பது வழக்கம். இங்ஙனே பல.

கூத்தப்பாக்கம் கிருஷ்ணமாச்சாரியர்.

“எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 18” இல் 2 கருத்துகள் உள்ளன

பின்னூட்டமொன்றை இடுக