எத்தனை மஹான்கள்! எத்தனை க்ரந்தங்கள்! 19


ஸுரபுரம் வித்வான்களின் வரலாறு

பழைய நைஜாம் ஸமஸ்தானத்தில் க்ருஷ்ணா நதிக்கும், பீமா நதிக்கும் இடையில் (குத்தி முதல் குல்பர்கா வரையிலும்) ஒரு சிற்றரசு ஏறத்தாழ A.D. 1700 வருஷம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரையிலும் ஆண்டது. இந்த அரச வம்சத்துக்கு பாமி நாயகர்கள் தலைவர்கள். புக்கபட்டணம் என்கிற ஊரில் சடமர்ஷண கோத்ரத்தில் அவதரித்த வேங்கடாசாரியர் என்கிற மஹானை தமது தலைநகரமான ஸுரபுரத்தில் எழுந்தருளியிருக்கும்படி மேற்படி வேந்தன் வேண்ட, அதன்படிக்கு இந்த ஸ்வாமியும் அங்கு எழுந்தருளி அனேக சிஷ்யர்களுக்கு ஸகல சாஸ்த்ரங்களையும் ப்ரவசநம் செய்து கொண்டு வந்தார். இந்த ஸ்வாமியின் குமாரர் அண்ணயாசாரியர்I என்பவர். இவர் குமாரர் நரஸிம்ஹாசாரியர் இவர் குமாரர் ஸ்ரீநிவாஸ தாதாசாரியர் I. இவர் திருக்குமாரர் வேங்கடாசாரியர் II  என்கிற மஹான். இந்த ஸ்வாமி பல ஸ்ரீகோசங்கள் அருளிச் செய்திருக்கிறார். இவற்றுள் சில :– 1, ஆனந்ததாரதம்ய கண்டனம் (2). ஜகன்மித்யாத்வ கண்டனம் (3) வேதாந்த தேசிக தண்டகம் (4) வேதாந்த தேசிகாஷ்டோத்தர சதநாம ஸ்தோத்ரம் (5) ஸித்தாந்த ரத்நாவளீ. (இந்த ஸ்ரீகோசத்தில் ஸ்ரீபாஞ்சராத்ர சாஸ்திரங்களின் ப்ரமாண்யமும், திருவாழி திருச்சங்குகளை பிராம்ஹணர்கள் யாவரும் தரிக்க வேண்டும் என்பது பற்றியும், மற்றும் ஸம்ப்ரதாயத்திற்குத் தேவையான ஸகல விசேஷார்த்தங்களையும் நிரூபித்திருக்கிறார்) (6) ஸித்தாந்த வைஜயந்தி முதலியன.

இந்த ஸ்வாமியின் குமாரர் அண்ணயாசாரியர் II இவர் கௌண்டின்ய ஸ்ரீநிவாஸா சாரியருடையவும் தமது தந்தையாருடையவும் சிஷ்யர். இவரருளிய கிரந்தங்கள் வருமாறு:- (1) ஆசாரிய விம்சதி (2) ஆனந்ததாரதம்ய கண்டனம் (3) தத்வகுணாதர்ச: (4) வ்யாவஹாரிக ஸத்யத்வ கண்டன ஸார: (5) ரஸோதாரபாண: (6) ஸ்ரீநிவாஸ ஸ்துதி: (7) ந்ருஸிம்ஹவிம்சதி:  முதலியன

இந்த ஸ்வாமியின் குமாரர் ஸ்ரீநிவாஸாசாரியர் II ஆவார். இவர் “அபினவ நிகமாந்த மஹாதேசிகன்” என்கிற விருது உடையவர். ஸுரபுரம் ஸ்வாமிகளில் மிகவும் பிரஸித்தியாயிருந்தவர். தொண்ணூற்றாறு கிரந்தங்கள் அருளிச் செய்து நமது ஸித்தாந்தத்தை போஷித்தவர். இவர் மேற்கூறிய கௌண்டின்ய ஸ்ரீநிவாஸ தீக்ஷிதருடைய சிஷ்யர். தமது தமையனாராகிய அண்ணயாசாரியரிடம் (ஸுரபுரம் குடும்பத்தில் தகப்பனார், தமையன், குமாரர் எல்லாருக்குமே அனேகமாக அண்ணயாசாரியர் என்பது செல்லப் பெயராகவும், மாறி மாறியும் வருகிறது.) ஸகல சாஸ்திரங்களையும் பாடம் கேட்டதுடன் தமது தமையனாரைப் பற்றி தமது புஸ்தகங்களில் வெகு மதிப்புடன் அடிக்கடி கூறியதுடன், சில முக்கியமான சாஸ்த்ரார்த்த விஷயங்களில் அஸ்மத் அக்ரஜ சரணாஸ்து என்பதாக தமது தமையனாரின் திருவுள்ளத்தையும் ஸாதிப்பது வழக்கம். இவர் அருளிச் செய்த கிரந்தங்கள் வருமாறு:–

(1) தத்வ மார்த்தாண்ட : இது ஸ்ரீபாஷ்யத்தின் கண்டனமாக சந்திரிகை என்பதான மத்வ க்ரந்தம் ஒன்று ஏற்பட, அதற்கு கண்டனமாக ஏற்பட்டது. ௸ சந்திரிகை என்னும் கிரந்தம் இரண்டே அத்தியாயத்திற்கு ஏற்பட்டபடியால், இதுவும் இரண்டாவது அத்தியாயத்துடனிருக்கிறது. விசதமாய் ஸ்ரீபாஷ்ய ச்ருத ப்ரகாசிகார்த்தங்களை இடை யிடையே விளக்கிக் கொண்டு ஸர்வஸுலபமான, ஆனால் மிகவும் கம்பீரமான – வாக்ய சைலியுடன் பரமதங்களைக் கண்டிப்பதுடன், நம் ஸித்தாந்தத்திற்கு உபயுக்தமான அனேக யுக்திகளை நிரூபணம் செய்து வெகு அழகாய் அமைந்த கிரந்தமிது. இவருக்கு ஸகல சாஸ்த்ரங்களும் எப்படி லாகவமாய் ஆயாஸமின்றி விளங்காநின்றன என்பது இந்த புஸ்தகத்தை ஸேவித்தவர்களுக்கே விளங்கும். மைஸூர் ஸ்ரீ பரகால மடத்தில் இதை அச்சிட்டுள்ளார்கள்.

(2) நயத்யுமணி: இது சாங்கராதிகளான இதர மதநிராஸ பூர்வகமாய் நம் ஸித்தாந்தானு குணமாய் ஸ்ரீபாஷ்யாதிகளுக்கு உரையே போல் அமைந்த சாரீரக சாஸ்த்ர விசார க்ரந்தம். அடிக்கடி தத்வமார்த்தாண்டம் முதலிய க்ரந்தங்களில் விஸ்தரஸ்து நயத்யுமணௌ என்று எடுத்தாளப் பட்டிருக்கிறது. இது அவசியம் அச்சிட வேண்டிய அரிய பொக்கிஷம்.

(3) ௸  நயத்யுமணிக்கு வியாக்யானமாக இவரே அருளிச் செய்த நயத்யுமணி தீபிகா. (இங்கு ஒரு விஷயம் கவனிக்கவும். ஸ்ரீ தேசிகனுக்கு கொஞ்சம் முன் காலத்தில் எழுந்தருளியிருந்த மேகநாதாரிஸூரி என்கிற ஆத்ரேயர் (ஸோமயாஜியாண்டான் வம்சத்தைச் சேர்ந்தவர்) எழுதி ஸமீபத்தில் சென்னை ஓரியண்டல் லைப்ரரியில் வெளியிட்ட நயத்யுமணி என்கிற வாத புஸ்தகம் வேறு இது வேறு. இதேபோல் ௸  மேகநாதஸூரியின் நயத்யுமணிக்கு ச்லேஷ யமக சக்ரவர்த்தியும் ஸர்வசாஸ்த்ர பாரத்ருச்வாவுமாகிய அரசாணிபாலை கவிவித்வன்மணி வெங்கடாசாரியர் ஸ்வாமி அருளிச் செய்த வியாக்யானமாகிய நயத்யுமணி தீபிகா வேறு. பெயர் ஒற்றுமையைத் தவிர விஷயமும் கர்த்தாக்களும் வேறானவர்கள்)

(4) ஓங்கார தர்பணம்: இதில் ப்ரம்ஹ ஸூத்ரத்தில் ஒவ்வொரு ஸூத்ரத்தினாரம்பத்திலும் முடிவிலும் பிரணவத்தையனுஸந்தித்து வருபவர்களின் மதத்தை பிரமாணங்களுடன் பரிசீலனம் செய்து ஸித்தாந்தம் செய்தருளியுள்ளார்.

(5) ஸித்தாந்த சிந்தாமணி:  பரப்ரம்ஹத்திற்கு நிமித்த காரணத்வமே உள்ளது. உபாதான காரணமாக பிரம்ஹம் உலகிற்கு ஆகமுடியாது என்கிற நையாயிக – மத்வாதிகளின் மதத்தை பரிசீலித்து ஸித்தாந்தப்படிக்கு உபாதானத்வத்தை ஸமர்த்தனம் செய்தருளி யிருக்கிறார். இது ஏறத்தாழ 60 வருஷங்களுக்கு முன் காஞ்சீபுரத்தில் ஸ்ரீஸுதர்சன முத்ராசாலையில் அச்சிடப் பட்டது.

(6) ஸித்தாந்த சிந்தாமணிக்கு இவரே ப்ரபா என்கிற உரை எழுதியிருக்கிறார் . இது அச்சில் வரவில்லை.

(7)  ஸங்கதிரத்னதீபிகா: திருவரங்கத்தில் உள்துறைக் கைங்கர்யம் செய்து வந்த ஸ்ரீஸேனேச்வராசாரியர் என்கிற பூர்வாசாரியர் அருளிச் செய்த ந்யாயகலாபஸங்க்ரஹம் என்பதைப் போலும், சடமர்ஷண கோத்ரஜாதராகிய ஸ்ரீவிஷ்ணுசித்தாசார்யர் (விவரண காரர்) அருளிச் செய்த ஸங்கதீமாலா என்கிற ஸ்ரீகோசத்தைப் போலும்,ஸ்ரீபாஷ்யத்தில் ஒவ்வொரு அதிகரணத்திலும் ஸங்கதியை உபாதானம் செய்து, இதரர்கள் கூறும் ஸங்கதிகளை பரிசீலனம் செய்து ஸாராஸார விவேசனம் பண்ணியருளுகிறார் இதில். இதுவே ஸங்கதிரத்னதீபம் என்றும் வழங்கப் பெறும்.

(8) உபஸம்ஹாரவிஜயம் உபக்ரமபராக்ரமம் என்கிற இதரர்களின் இரண்டு நூல்களுக்கு மறுப்பாக வந்து நமது ஸித்தாந்நந்நைக் கூறுவது உபஸம்ஹாரவிஜய நிராகரணம் என்கிற பிரகரண புஸ்தகம். இதில் இந்த ஸ்வாமியின் மீமாம்ஸாபரிசயம் வியக்கத்தக்கபடி உள்ளது.

(9) க்ஞானரத்னப்ரகாசிகா:  இதில் வேதனம் உபாஸனம் ஸ்யாத் என்கிற வாக்யத்திற்கு வியாக்யானமும், கேவல வாக்யார்த்தக்ஞானம் மோக்ஷ ஸாதனமாகாது என்பதும், பக்தி ரூபான்னக்ஞானமும் பிரபத்தியுமே மோக்ஷ ஸாதனம் என்பதும் பரக்க விளக்கப் பட்டிருக்கிறது.

(10) ஹரிகுணதர்பணம்: விவர்தாத்வைதிகளின் நிர்குணப்ரம்ஹ வாதத்தை மறுத்து எம்பெருமானுக்குள்ள கல்யாண குணங்களை வேதங்களைக் கொண்டு நிரூபணம் பண்ணி, “ஸத்யம், க்ஞானம் அனந்தம் ப்ரம்ஹ” என்கிற வாக்யத்திற்கு ஸ்ரீ ஆளவந்தாரின் ஸித்தித்ரயத்தை அடியொற்றி விரிவான வ்யாக்யானமும் இதில் செய்துள்ளார்.

(11) ஸாம்யதர்பணம்: இதில் “நிரஞ்ஜன: பரமம் ஸாம்யம் உபைதி” என்கிற வேத வாக்கியத்திற்கு விரிவான உரையிட்டருளி ஏகதேசிகளின் (மாத்வர்கள்) ஆனந்ததார தம்யத்தை நிரஸித்திருக்கிறார்.

(12) ஸாரதர்பணம்: அவயவாதிரிக்தமாக அவயவி என்பதைக் கொள்ளும் நையாயிகர்களை மறுத்து ஆரம்பணாதிகரண ஸித்தாந்தத்தை பலபடியாக போஷித்துள்ளார் இதில்,

(13) அருணாதிகரண மஞ்சரி: அல்லது அருணாதிகரண ஸரணிவிவரணி: இதில் நடாதூர் அம்மாள் தமது தத்வஸாரத்தில் ஸ்ரீபாஷ்யகாரரால் அருணாதிகரண விஷயத்தை சோதித்தளித்தபடி நிரூபணம் செய்ததே போல – அவரை அடியொற்றி அதில் குரு – பட்ட மதங்களை பரக்க நிரஸித்து வாத நக்ஷத்திரமாலையை கடாக்ஷித்துக் கொண்டு அருணாதிகரண விசாரம் செய்து ஸித்தாந்த நிரூபணம் செய்திருக்கிறார். மீமாம்ஸகர்கள் அவசியம் படிக்க வேண்டும். அருமையான புஸ்தகம். மைஸூர் ஸ்ரீ பரகால மடத்தில் அச்சிட்டுள்ளார்கள்.

இவைதவிர : –(12) ஆனந்ததாரதம்ய கண்டனம், (15) ஓங்காரார்த்தவாத: (16) நயமணிகலிகா (17) ஜிக்ஞாஸாதர்பண: (18) ணத்வதர்பண: (19) ப்ரணவதர்பண: (20) ப்ரதான ப்ரதிதந்த்ர தர்பண: (21) புச்சப்ரம்ஹவாத நிராஸ: (22) பேத தர்பண: (23) விரோத நிரோத: இதில் சிறிது பாகம் மைஸூர் ஸ்ரீபரகால மடத்தில் அச்சிடப் பட்டிருக்கிறது. இதற்கே ஸ்ரீபாஷ்ய பாதுகா என்கிற பெயரும் உண்டு. (24)கையடவ்யாக்யானம்:  மஹாபாஷ்ய வ்யாக்யானமான கையடரியற்றிய ப்ரதீபத்திற்கு இது உரை. விஸ்தரஸ்து கையடவ்யாக்யானே அஸ்மாபி:க்ருத: என்பதாக ஸித்தாந்த சிந்தாமணியில் (பக்கம் 62) இவர் இதை எடுத்திருக்கிறார். சப்தகௌஸ்துபம் முதலான பட்டோஜி தீக்ஷிதரின்  புஸ்தகங்களுக்கு கண்டனம் இது என்பதாய் (இது எடுத்துள்ள சைலியிலிருந்து)ஏற்படுகிறது. (25) விரோதவரூதினீப்ரமாதினீ (26) ஷஷ்ட்யர்த்தநிர்ணய: (27) தத்தரத்னப்ரகாசிகா (28) நீதிசதகம் (29) ஸுபாஷிதானி முதலியன. இவர் அருளிச் செய்த புஸ்தகங்கள் அடையாறு லைப்ரரியில் இருப்பதாய் ஸ்ரீஉ.வே.வெங்கடாத்ரியகரம் கிருஷ்ணமாசாரியார் ஸ்வாமி தமது உரையுடன் கூடிய ௸ ஸுரபுரம் வித்வான்களில் ஒருவராகிய புச்சி வெங்கடாசாரியர் அருளிச் செய்த வேதாந்தகாரிகாவளி என்கிற புஸ்தகத்தின் முன்னுரையில் ௸ புஸ்தகங்களின் எண்களுடன் குறிப்பிட்டுள்ளார். மைஸூர் லைப்ரரி புஸ்தக ஸூசியில் இன்னும் பல ஸ்ரீகோசங்கள் இவர் அருளிச் செய்ததாய் காட்டப் பெற்றுள்ளன. ஆயினும் அவைகள் அடியேன் பார்வைக்கு வரவில்லையாகவே அவற்றைப் பற்றி இங்கு விளக்கவில்லை. இங்கு குறித்தனவற்றுள் இன்னும் சில அச்சில் (தெலுங்கு எழுத்தில்) உள்ளன.

இவருக்கு அடுத்தபடியாக இவர் பேரராகிய வேங்கடாசாரியர் III குறிப்பிடத் தக்கவர். இந்த ஸ்வாமிக்கு அய்யா கிரீடி வெங்கடாசார்யர் என்றே பிரஸித்தியுண்டு. இவரருளிய ஸ்ரீ கோசங்கள்:

1. அலங்கார கௌஸ்துபம் (இது விரிவான அலங்கார சாஸ்த்தரவிசார கிரந்தம். மிகப் பெரிய வித்வானும் மைஸூர் பரகால மடத்தில் ஆஸ்தானத்தில் எழுந்தருளியிருந்தவரும், லக்ஷ்மீஸஹஸ்ரத்திற்கு ரத்னப்ரகாசிகை என்கிற விரிவான உரையையும், அலங்காரமணி ஹாரம் முதலிய ப்ரௌட க்ரந்தங்களை யருளிச் செய்தவரும் கவிகண்டபேருண்டம் என்கிற சிறப்புத் திருநாமமுடையவருமாகிய ஸ்ரீ க்ருஷ்ண ப்ரம்ஹதந்த்ர பரகால மஹா தேசிகன் தமது (ஹம்ஸஸந்தேச வ்யாக்யானமான) ரஸாஸ்வாதினீயில் அடிக்கடி இந்த அலங்கார கௌஸ்துபத்தைக் கையாண்டுள்ளார். இது ஆலங்காரிகர்கள் யாவரும் படித்துப் பயனடைய வேண்டிய அரிய புஸ்தகம்.

2. க்ருஷ்ணபாவசதகம்

3.கஜஸூத்ரவாதார்த்த:  (ஸ்ரீ உ.வே.மஹாமஹோபாத்யாய ஆர்.வி. க்ருஷ்ணமாசாரி யரால் இது திருக்குடந்தையில் அச்சிடப் பெற்றது). “ணேரணௌ –“ என்கிற அஷ்டத்யாயீ ஸூத்ரத்தின் க்ரோட பத்ரமிது. “ணேரணௌ ஸூத்ரவாக்யார்த்தம் பகவான் வேத்தி பாணினி:” என்று சொல்வது வழக்கம். அவ்வளவு கடினமிந்த ஸூத்ரம். இது பூர்வபக்ஷம் –ஸித்தாந்தம் என்பதாய் இரு பாகங்களைக் கொண்டது. வையாகரணர்களுக்கு மிகவும் ருசிக்கும்படியான கிரந்தம்.

4. ப்ரமாண்யவாத கண்டனம்: கதாதரபட்டாசாரியார்  என்கிற நவத்வீபதார்கிகர் எழுதிய ப்ரமாண்யவாதத்திற்கு  மறுப்பு இது. நையாயிக ரஞ்சகமானது.

5. ச்ருங்காரதரங்கிணீ முதலியன. இவற்றால் இவர் பல சாஸ்த்ரங்களில் வல்லுனர் என்பதுடன், பல சாஸ்த்ரங்களிலும் ஸ்ரீகோசமருளிச் செய்தவர் என்பதும் கவனிக்கத் தக்கது.

அடுத்தபடியாக புச்சி,வெங்கடாசாரியர் என்பவரைக் கூறவேண்டும். இவர் .1. விஷ்ணு ஸப்தவிபக்தி ஸ்தோத்ரம் 2. வேதாந்தகாரிகாவளீ முதலிய க்ரந்தங்களை அருளிச் செய்துள்ளார். இதில் வேதாந்தகாரிகாவளீயில் பத்து ப்ரகரணங்கள். ஸ்ரீந்யாயஸித்தாஞ்ஜ னாதிகளைப் போல் நம் ஸித்தாந்த ப்ரமேயங்களை அனுஷ்டுப் சுலோகத்தில் சுருக்கமாய் இதில் வெளியிட்டிருக்கிறார். இதற்கு ஸ்ரீஉ.வே. வெங்கடாத்ரியகரம் V. கிருஷ்ணமாசாரிய ஸ்வாமி ஸம்ஸ்க்ருதத்திலும் ஆங்கிலத்திலும் உரையெழுதி வெளியிட் டிருக்கிறார். ஸம்ஸ்க்ருதத்தில் பரிசயமில்லாதவர்கள்கூட நம் ஸித்தாந்தத்தை இந்த புஸ்தகத்தின் மூலம் ஸுலபமாய் அறிந்து கொள்ள முடியும்.

நம் ஸம்ப்ரதாயத்திற்கு ஸுரபுரத்தாரும், பரவஸ்து குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், பாலதன்வி குடும்பத்தினரும், மற்றும் பல குடும்பங்களும் “குடியடியாரிவர் கோவிந்தன் தமர்க்கென்று” என்கிறபடியே பிதாபுத்ர க்ரமத்தில் ஒவ்வொருவரும் ப்ரௌடமான பல புஸ்தகங்களை யருளியிருக்கிறார்கள். இவற்றில் பல இன்னும் அச்சேறி வெளிவரவில்லை ஊக்கமுடையவர்கள் – குறிப்பாக ௸ குடும்பங்களைச் சேர்ந்த தனிகர்கள் இவற்றில் முடிந்த வரையிலும் (முக்கியமானவைகளையாவது) அச்சிட்டு வெளியிடுவது நலம். மேடையேறி ஏதோ உசிதமாய் உபந்யாஸம் ஸாதிப்பதும், அதைக் கேட்டு தனிகர்களும் ஆனந்தப்பட்டு விடுவதினால் மட்டும் நமது ஸித்தாந்தம் ஸ்தாபிதமாகியும் விளங்கியும் விடாது. மூலவரில்லாமல் உத்ஸவர் வெளிவருவது எப்படியில்லையோ – அவ்விதமே சிறந்த சாஸ்த்ர பாண்டித்யமுள்ள ஒரு சிலராவது விளங்கினால்தான் மேடை பண்டிதர்களும் உபன்யாஸங்களைக் குறைவற நடத்த முடியும். இதை மனதில் வைத்துக் கொண்டு இனிமேலாவது நம் ஸித்தாந்தத்திலூற்றமுள்ளவர்கள் முக்கியமான சாஸ்த்ர புஸ்தகங்களை வெளியிட்டு நம் முன்னோருக்கும், ஸித்தாந்தத்திற்கும் சாச்வதமான தொண்டு செய்தருள எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

வா. ஸ்ரீவத்ஸங்காசாரியர் ஸ்வாமி.

பின்னூட்டமொன்றை இடுக