விஷ்ணு சஹஸ்ரநாமம் — தமிழில்


.3.
 
மதகளி றன்னான் வெல்க; மதுரைப்
பதியினன் வெல்க; பத்தராவி வெல்க;
அசுரர் கூற்றம் வெல்க; மணித்தேர்
விசயற் கூர்ந்தான் வெல்க; யசோதைதன்
சிங்கம் வெல்க; சிலையாளன் வெல்க;
செங்கதிர் முடியான் வெல்க; அடலாழிப்
பிரானவன் வெல்க; பீடுடையான் வெல்க;  410.
இராவ ணாந்தகன் வெல்க;அந்தமில்
புகழான் வெல்க;புதுனலுருவன் வெல்க;
திகழும் பவளத் தொளியான் வெல்க;
அந்தமிழ் இன்பப் பாவினன் வெல்க;
இந்திரன் சிறுவன்தேர் முன்னின்றான் வெல்க;
ஆநிரை மேய்த்தான் வெல்க;வைத்த
மாநிதி வெல்க;மண் ணிரந்தான் வெல்க;
மத்த மாமலை தாங்கீ வெல்க;             420
சித்திரத் தேர்வலான் வெல்க;சீற்றம்
இல்லவன் வெல்க;இழுதுண்டான் வெல்க;
மல்லரை யட்டான் வெல்க;மாசறு
சோதீ வெல்க;சுடர்விடு கமலப்
பாதன் வெல்க;பகலாளன் வெல்க;
படிக்கே ழில்லாப் பெருமான் வெல்க;
இடிக்குர லினவிடை யடர்த்தான் வெல்க;    431
அரட்டன் வெல்க;அரியுருவன் வெல்க;
இரட்டை மருதம் இறுத்தான் வெல்க;
வாணன் தடந்தோள் துணித்தான் வெல்க;
ஓணத்தான் வெல்க;உந்தியில் அயனைப்
படைத்தான் வெல்க; பருவரையாற் கடலை
அடைத்தான் வெல்க; ஆழிசங்கு வாழ்வில்
தண்டா திப்பல் படையான் வெல்க;
அண்டமோ டகலிடம் அளந்தான் வெல்க;
அரியுரு வாகி யந்தியம் போதில்
அரியை யழித்தவன் வெல்க; அமரர்
பிதற்றும் குணங்கெழு கொள்கையன் வெல்க;  440
மதியுடை அரற்கும் மலர்மகள் தனக்கும்
கூறு கொடுத்தருள் உடம்பன் வெல்க;
ஏறும் இருஞ்சிறைப்புட் கொடியான் வெல்க;
ஒத்தார் மிக்கார் இல்லவன் வெல்க;
பத்திரா காரன் வெல்க;பழமறை
தேடியுங் காணாச் செல்வன் வெல்க;
ஆடும் கருளக் கொடியான் வெல்க;
அடைந்தார்க் கணியன் வெல்க;கடலைக்
கடைந்தான் வெல்க;கட்கினியான் வெல்க;
காண்டற் கரியவன் வெல்க;புள்வாய்                450
கீண்டான் வெல்க;கேடிலான் வெல்க;
கையில் நீளுகிர்ப் படையான் வெல்க;
வையம் அளந்தான் வெல்க;யாவையும்
ஆனான் வெல்க;அமுதுண்டான் வெல்க;
ஊனா ராழிசங் குத்தமன் வெல்க;
அவலம் களைவான் வெல்க; என்றானும்
அவுணர்க் கிரக்கம் இலாதான் வெல்க;
அறவ னாயகன் வெல்க;மனத்து                    460
அறமுடை யோர்கதி வெல்க;அறுசுவை
அடிசில் வெல்க;ஆதிப்பிரான் வெல்க;
வடிசங்கு கொண்டான் வெல்க;வண்புகழ்
நாரணன் வெல்க;நாயகன் வெல்க;
ஆர மார்பன் வெல்க;அண்டர்
தங்கோன் வெல்க;தம்பிரான் வெல்க;
சங்கமிடந்தான் வெல்க;சனகன்                    470
மருமகன் வெல்க;மதுசூதன் வெல்க;
உருவு க்கரிய ஒளிவணன் வெல்க;
எங்கும் பரந்த தனிமுகில் வெல்க;
நங்கள் நாதன் வெல்க;நல்வினைக்கு
இன்னமுது வெல்க;ஏழிசை வெல்க;
பிள்ளை மணாளன் வெல்க;வலத்துப்
பிறைச்சடை யானை வைத்தவன் வெல்க;
நிறைஞா னத்தொரு மூர்த்தி வெல்க;                480
அலைகடற் கரைவீற் றிருந்தான் வெல்க;
சிலையால் மராமரம் சிதைத்தான் வெல்க;
அனந்த சயனன் வெல்க;இலங்கையைச்
சினந்தனால் செற்ற கோமகன் வெல்க; 
ஆய்ப்பாடி நம்பி வெல்க;நஞ்சுகால்
பாப்பணைப் பள்ளி மேவினான் வெல்க;
உலகளிப்  பானடி நிமிர்த்தான் வெல்க;
உலகமூன் றுடையான் வெல்க;உறங்குவான்
போல யோகுசெய் பெருமான் வெல்க;
காலசக் கரத்தான் வெல்க;காலநேமி               490
காலன் வெல்க; காமரூபி வெல்க;
பால்மதிக் கிடர் தீர்த்தவன் வெல்க;
பிறப்ப றுக்கும் பிரானவன் வெல்க;
மறைப்பெ ரும்பொருள் வெல்க; மனனுணர்
அளவிலன் வெல்க;அண்டவாணன் வெல்க;
வளரொளி யீசன் வெல்க;வருநல்
தொல்கதி வெல்க;தூமொழியான் வெல்க;          500
செல்வமல்கு சீரான் வெல்க;செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலன் வெல்க;
வைப்பே வெல்க;மருந்தே வெல்க;
வியலிட முண்டான் வெல்க;நமன் தமர்க்கு
அயர வாங்கரு நஞ்சன் வெல்க;
ஆய்மகள் அன்பன் வெல்க;வஞ்சப்
பேய்மகள் துஞ்சநஞ் சுண்டான் வெல்க;
அழகியான் வெல்க;அலங்காரன் வெல்க;            510
தழலைந் தோம்பி வெல்க; தக்கணைக்கு
மிக்கான் வெல்க;விண்ணவர் கோன் வெல்க;
திக்குநிறை புகழான் வெல்க;திருவாழ்
மார்பன் வெல்க;மதுரவாறு வெல்க;
கார்மலி வண்ணன் வெல்க;குவலயத்
தோர்தொழு தேத்தும் ஆதி வெல்க;
செங்கமல நாபன் வெல்க;நரங்கலந்த               520
சிங்கம் வெல்க;சிந்தை தன்னுள்
நீங்காதிருந்த திருவே வெல்க;
தேங்கோதநீர் உருவன் வெல்க;
பிள்ளையரசு வெல்க;பிள்ளைப்பிரான் வெல்க;
வெள்ளியான் வெல்க;வேதமயன் வெல்க;
வேல்வேந் தர்பகை கடிந்தோன் வெல்க;
ஆல்மேல் வளர்ந்தான் வெல்க;ஆழி
வலவன் வெல்க;வாயழகன் வெல்க;                 531
நிலமுன மிடந்தான் வெல்க;நீலச்
சுடர்விடி மேனி யம்மான் வெல்க;
அடியார்க் கென்னை ஆட் படுத்தோன் வெல்க;
பாரதம் பொருதோன் வெல்க;பாரளந்த
பேரரசு வெல்க;பெற்றமாளி வெல்க;
காளை யாய்க் கன்று மேய்த்தான் வெல்க;
கேளிணை ஒன்றும் இலாதான் வெல்க;
வேதத்து அமுதமும் பயனும் வெல்க;                 540
வேத முதல்வன் வெல்க;வேதத்தின்
சுவைப் பயன் வெல்க;சுடரான் வெல்க;
நவின்றேத்த வல்லார் நாதன் வெல்க;
ஆதி மூர்த்தீ வெல்க;அந்தியம்
போதில் அவுணனுடல் பிளந்தான் வெல்க;
ஆமையும் ஆனவன் வெல்க; துளவுசேர்
தாமநீண் முடியன் வெல்க;தனிப்பெரு
மூர்த்தி வெல்க; முண்டியான் சாபம்
தீர்த்தான் வெல்க;தெய்வம் வெல்க;
வளைவணற் கிளையவன் வெல்க;தயிரொடு          551
அளைவெணெய் உண்டான் வெல்க;மெய்ந்நலம்
தருவான் வெல்க;சாமமா மேனி
உருவான் வெல்க;உய்யவுலகு படைத்து
உண்டமணி வயிறன் வெல்க; அண்டமாய்
எண்டிசைக் குமாதி வெல்க;அண்டமாண்
டிருப்பான் வெல்க;இருங்கைம் மாவின்
மருப்பொசித் திட்டான் வெல்க;மரமெய்த
திறலான் வெல்க;தீமனத் தரக்கர்                     560
திறலை யழித்தான் வெல்க;திருவின்
மணாளன் வெல்க;மண்ணுயிர்க் கெல்லாம்
கணாளன் வெல்க;மண்ணழகன் வெல்க;
கையெடு கால்செய்ய பிரான் வெல்க;
வைகுந்த நாதன் வெல்க; வைகுந்தச்
செல்வன் வெல்க;செங்கணான் வெல்க;
தொல்வினைத் துயரைத் துடைப்பான் வெல்க;
கூரா ராழிப் படையவன் வெல்க;                    570
காரேழ் கடலேழ் மலையே ழுலகும்
உண்டும்ஆ ராத வயிற்றன் வெல்க;
தொண்டர் நெஞ்சில் உறைவான் வெல்க;
கொடைபுகழ் எல்லை யிலாதான் வெல்க;
குடமாடு கூத்தன் வெல்க;குவளை
மலர்வணன் வெல்க;மண்கொண்டான் வெல்க;
புலம்புசீர்ப் பூமி யளந்தவன் வெல்க;
உலகுண்ட வாயன் வெல்க;ஊழியேழ்
உலகுண் டுமிழ்ந்த ஒருவன் வெல்க;
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே வெல்க;                    580
கடல்படா அமுதே வெல்க;அம்பொனின்
சுடரே வெல்க;நற் சோதீ வெல்க;
அமரர் முழுமுதல் வெல்க;அமரர்க்கு
அமுதம் ஊட்டிய அப்பன் வெல்க;
அமரர்க் கரியான் வெல்க;பொதிசுவை
அமுதம் வெல்க;அறமுதல்வன் வெல்க;
அயனை யீன்றவன் வெல்க;ஆலினிலைத்
துயின் றவன் வெல்க;துவரைக்கோன் வெல்க;     591
அரக்க னூர்க்கழல் இட்டவன் வெல்க;
இருக்கினில் இன்னிசை யானான் வெல்க;
விழுக்கையாளன் வெல்க;துளவம்
தழைக்கும் மார்பன் வெல்க;அளத்தற்கு
அரியவன் வெல்க;அயோத்தி யுளார்க்கு
உரியவன் வெல்க;உயிரளிப்பான் வெல்க;
ஏழுல குக்குயிர் வெல்க;ஆற்றல்
ஆழியங் கையமர் பெருமான் வெல்க;              600.
                                                                  தொடர்வது   "அருள்க"
 

பின்னூட்டமொன்றை இடுக